Last Updated : 10 May, 2017 09:54 AM

 

Published : 10 May 2017 09:54 AM
Last Updated : 10 May 2017 09:54 AM

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கலால் வெளியேற்றப்படும் ஆசிரியர்கள், ஊழியர்கள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கலை காரணம் காட்டி ஆசிரியர்கள், பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

1929-ம் ஆண்டு செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.

50 துறைகளைக்கொண்ட இப்பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் முறையற்ற நியமனங்களால் பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கல் ஏற்பட்டது. ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர், ஊழியர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. கடந்த 2013-ம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக தனி அதிகாரியாக தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட முறையற்ற நியமனம், யுஜிசி விதிகளுக்கு முரணான பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் என பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்து, தமிழக அரசின் உயர்கல்வித் துறைக்கு விரிவான அறிக்கையை அனுப்பினார்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் மணியன் நியமிக்கப்பட்டார். பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசிடம் நிதி பெற்று ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள், பணப் பயன்கள் வழங்கப்படவில்லை. இதனால், நிர்வாகத்திடம் அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்தது.

தேவைக்கு அதிகமாக

இந்நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட சிண்டிகேட் கூட்டத்தில் தேவைக்கு அதிகமாக பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களை தமிழகத்தில் உள்ள பிற அரசு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் (டெபுடேஷன்) செய்வது என முடிவு செய்யப் பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 369 உதவி பேராசிரியர்கள் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு ஒரு வருடமாகியும் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வருடாந்திர ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலாளரின் உத்தரவின்படி தற்போது 545 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என 2,645 பேருக்கு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யுஜிசி விதிகளுக்கு முரணாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பேராசிரியர்களாக வும், தனி அலுவலராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணியிட மாற்றம் செய்யும்போது, கல்வித்துறை விதிகளுக்கு மாறாக இவர்களை எப்படி பணியமர்த்து வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவமானப்படுத்தப்படுகிறோம்

இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் பெற்ற பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜலட்சுமி கூறும்போது, “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டு பணி நிரவல் செய்யப்பட்ட எங்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதால் அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் ஆசிரியர்கள் நலச் சங்கத்தை தொடங்கியுள்ளோம். பணிபுரிய சென்ற இடங்களில் நாங்கள் திறமையற்றவர்கள் என்றும், முறையான பயிற்சியற்றவர்கள் என்றும் அவமானப்படுத்தப்பட்டு வருகிறோம். இருந்தாலும் நாங்கள் பாடம் எடுத்த வகுப்பில் எங்களுக்கு முன்பு இருந்த தேர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இந்த ஆண்டு தேர்ச்சியை உயர்த்தி காட்டியுள்ளோம்.

எங்களுக்கு இதுவரை நியாயமாக கிடைக்க வேண்டிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு பணியமர்த்தல் உள்ளிட்ட எந்த பணியும் வழங்காமல் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். இது எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது” என்கிறார்.

முழு தகுதியுடன்

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் சுப்ரமணியன் கூறும்போது, “எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர், ஊழியர்கள் அனைவரும் முழு கல்வித் தகுதியுடன் உள்ளனர். இங்கு பயின்ற பலர் தமிழகத்தின் பல கல்விக் கூடங்களில் சிறப்பான ஆசிரியர்களாக பணியாற்றி வருவதே அதற்குச் சான்று.

2012-ல் எங்கள் பல்கலைக்கழகம் பெரும் பிரச்சினையை சந்தித்தது. அப்போது நாங்கள் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரை இணைவேந்தராக நியமிக்க வேண்டும். பழைய இணைவேந்த ரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடியை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு ஆசிரியர், ஊழியர்களுக்கான நிதியை (பிளாக் கிராண்ட்) உயர்த்தித் தர வேண்டும். சிறப்பு நிதியாக ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும். இடைகால ஏற்பாடாக ஆசிரியர், ஊழியர்களை 3 ஆண்டுக்கு மட்டும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள கல்லூரிகளை பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தோம். இதையெல்லாம் செய்திருந்தாலே பல்கலைக்கழகம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு வந்திருக்காது” என்றார்.

பாரதிய ஜனதா கட்சி மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் கூறும்போது, “பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக ஊழியர்களை நியமனம் செய்துவிட்டு, பின்னர் நிதி பற்றாக்குறை என்று கூறுவது சரியான நிர்வாக நடைமுறை அல்ல. கொல்லைப்புறம் வழியாக அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற இது வழிவகுத்திருக்கிறது. இந்த நடைமுறை படித்து அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர் களை பாதிப்படையச் செய்யும்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தானாக முன்வந்து ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களுக்கு உரிய பணப் பயன்களை அளித்தால் ஊழியர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். நிதிநிலையும் சீரடையும். அரசின் முன் அனுமதியின்றி எந்த விதவேலைவாய்ப்பையும் வழங்கக் கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x