Published : 08 Mar 2017 03:01 PM
Last Updated : 08 Mar 2017 03:01 PM

அதிமுக பிளவால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கவலையா?- மாநில தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் கேள்வி

அதிமுக பிளவுபட்டு நிற்பதால் இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா என்ற கவலையில் மாநில தேர்தல் ஆணையர் உள்ளாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

குற்றவாளியின் பினாமி அரசாக செயல்பட்டு, மாநில அளவிலான நிர்வாகத்தை முற்றிலுமாக சீரழித்து விட்ட அதிமுக அரசு, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மனமில்லாமல் இப்போது உள்ளாட்சி நிர்வாகத்தையும் உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உடனடியாக நாடுவது உள்ளாட்சி அமைப்புகளைத்தான் என்ற தொடக்கப் பள்ளி அனுபவத்தைக் கூட பெறாத அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை எப்படி தள்ளிப் போடலாம் என்பதிலேயே தீவிரக் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

கடந்த 4.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய வெளிப்படைத்தன்மைக்கும் வித்திடும் அந்த தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகமும் மனதார வரவேற்றது. குறிப்பாக 31.12.2016 க்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடித்து விட வேண்டும் என்றும் அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கும், அவர்களின் பதவியை மேலும் நீட்டிப்பதற்கும் அதீத ஆர்வம் காட்டிய அதிமுக அரசு, தேர்தலை நடத்துவதற்கு முன்வரவில்லை.

அதற்கு பதில் தனி நீதிபதி அவர்களின் தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமே மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் 21.2.2017 அன்று நிராகரித்து, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், 14.5.2017-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அது தவிர மாநில தேர்தல் ஆணையம் கேட்கும் உதவிகளை, ஊழியர்களைக் கொடுத்து மாநில அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட உதவிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த தீர்ப்பையும் மதிக்காமல் இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் மாநில தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.

இந்த நேரத்தில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் தேர்தல் தேதியை நிர்ணயிப்பது தொடர்பாகவே ஒன்றரை மணி நேரம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள வரிகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை.

எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பதில் மாநில தேர்தல் ஆணையம் அவ்வளவு பெரிய போராட்டத்தை வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு நடத்தியிருப்பதிலிருந்தே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அலட்சிய மனப்பான்மை வெளிப்படுகிறது.

4.10.2016-க்கு முன்பு அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ள துடித்த மாநில தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ள 31.12.2016 கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆர்வமும் காட்டவில்லை. அக்கறையுடனும் செயல்படவில்லை. இந்நிலையில் இப்போது இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 14.5.2017க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என்று அளித்த தீர்ப்பின் மீதும் தொடர் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வை காரணம் காட்டி உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி நீட்டிப்பிற்கு சட்டம் கொண்டு வந்தது அதிமுக அரசு. இதே காரணத்தை உயர் நீதிமன்றத்திடமும் முறையிட்டு தேர்தல் தேதியை தள்ளி வைக்க மாநில தேர்தல் ஆணையமும் வாதிட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகுதான் 14.5.2017க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் கூட மாநில தேர்தல் ஆணையமோ, குற்றவாளியின் பினாமி அரசோ ஈடுபடவில்லை என்பது உள்ளாட்சி நிர்வாகத்தில் மிச்சம் இருப்பதையும் சீரழித்து விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்படுவதையே எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டுமல்ல தன்னாட்சி பெற்ற அரசியல் சட்ட அமைப்பு. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அனைத்து வகை அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியிருக்கிறது. ஆனால் குற்றவாளியின் பினாமி ஆட்சியின் சொல் கேட்டு நடக்கும் இந்த மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தயக்கம் காட்டி வருவது, ஜனநாயக நீரோட்டத்தைத் தடுக்கும் அரசியல் சட்ட விரோதச் செயலாகவே பார்க்க முடிகிறது.

அதிமுகவிற்குள் நடக்கும் உள்கட்சி சண்டையில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது? சின்னம் ஒதுக்குவதற்கு யார் கொடுக்கும் கடிதத்தை ஏற்றுக் கொள்வது? அதிமுக பிளவுபட்டு நிற்பதால் இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா? என்பதெல்லாம் மாநில தேர்தல் ஆணையரின் கவலையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது என்பதை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புரிந்து கொள்ள வேண்டும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆகவே உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயக தீபத்தை ஏற்றி வைத்து, கிராம சபைகளை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மட்டுமே மாநில தேர்தல் ஆணையத்திற்கு உள்ள தலையாய அரசியல் சட்ட கடமை என்பதை மாநில தேர்தல் ஆணையர் உணரவேண்டும்.

உயர்நீதிமன்றம் அறிவித்த கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அரசியல் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதிலாவது, சிறையில் இருக்கும் குற்றவாளியின் வழிகாட்டுதலின் படி செயல்படாமல், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக மதித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x