Published : 10 Nov 2014 08:44 AM
Last Updated : 10 Nov 2014 08:44 AM

எங்களுக்காக குரல் கொடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்

இலங்கையில் உள்ள ஒற்றை ஆட்சி முறையை மாற்றியமைக்க உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் சமூக ஆர்வலர் கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ‘பாதுகாப்பையும் இறையாண்மையையும் காத்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தெற்கில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற இலங்கை அரசு சகல நடவடிக்கை களிலும் இறங்கியுள்ளது. அதற்காக ராணுவத்துக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. தமிழ் பேசும் மக்களின் அரசு அதிகாரிகளாக சிங்களவர்களை நியமித்துள்ளனர். இந்த நிலையில், அவர்கள் மனமுவந்து எங்க ளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லாவிதத்திலும் எங்களை இயங்கவிடாமல் தடுப்பதே இலங்கை அரசின் குறிக்கோளாக இருக்கிறது. இருந்தாலும், சொற்ப அதிகாரங்களைக் கொண்டு பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் சிங்களமயமாக்கல் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறோம்.

ராணுவத்தினர் எங்கள் நிலங்களை கைப்பற்றி, அதில் பயிரிட்டு அறுவடை செய்து எங்களுக்கே விற்கும் நிலை உள்ளது. வலிகாமம் பிரதேசத்தில் ராணுவம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை கைப்பற்றி அங்கிருந்த குடியிருப்பு கள், கல்லூரிகள், கோயில்களை அழித்துவிட்டு, விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்களை கட்டி வருகின்றனர். இலங்கை யில் நடந்த தொடர் போர் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒரு லட்சம் இளம் விதவைகள் இருக்கின்றனர். பெண்களின் கதி பெரும் சங்கடமாக உள்ளது. போரினால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவோ, ஆலோசனை கூறவோ வசதிகள் இல்லை.

இலங்கை தமிழர்களுக்காக இந்தியா வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. தேவை யானவர்களுக்கு பதிலாக, அரசியல் சகாயம் பெற்றவர்களுக்கே வீடுகள் கிடைக்கின்றன.

இதுகுறித்து இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள்கூட அல்ல. அதற்காக உதவியே வேண்டாம் என்று சொல்லவில்லை. உரிய சட்டத் திருத்தமே முக்கியம்.

இலங்கை அரசியலமைப்பின் 13-வது சட்டத் திருத்தம், திருத்தப் பட்டாலும் அது எங்களுக்கு நன்மை அளிக்காது. அரசிய லமைப்பின் அடிப்படை, ஒற்றை ஆட்சியில் இருந்து மாற்றப்பட வேண்டும். எங்களது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும்.

1987-ம் ஆண்டு எங்கள் சார்பில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தியா எதிர்பார்த்தபடி எங்கள் நிலை அமையவில்லை என்றால் எங்கள் சார்பில் குரல் எழுப்ப இந்தியாவுக்கு உரிமை உண்டு. எங்களுக்குத் தேவையானதை செய்துகொடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும். வடகிழக்கு மாகாண மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அதை நடத்தும்படி இந்திய அரசு கேட்கலாம். மற்றவர்கள் தலையீடு இன்றி, நாங்கள் அன்றாட வாழ்க்கை வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.

தென்னாப்பிரிக்க உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி சகாரியா யாகூப், பெண்ணியவாதி வசந்த் கண்ணபிரான், வழக்கறிஞர் பரத்குமார் ஆகியோர் பேசினர். மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய பொதுச் செயலாளர் வீ.சுரேஷ் தலைமை உரையாற்றினார். தமிழ்நாடு, புதுச்சேரி பொதுச் செயலாளர் எஸ்.பாலமுருகன் வரவேற்றார்.

சென்னை தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி தலைவர் சரசுவதி உட்பட திரளானோர் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x