Published : 06 Jun 2017 08:44 AM
Last Updated : 06 Jun 2017 08:44 AM

பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?- 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து 2 வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், இது மிகவும் தீவிரமான பிரச்சினை எனவும், கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி யுள்ளது.

பால் கெட்டுப்போகாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைடு, குளோரின் போன்ற வேதிப் பொருட்களை தனியார் பால் நிறுவனங்கள் கலப் படம் செய்வதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்துக்காக உட்கொள்ளும் பாலில் தனியார் நிறுவனங்கள் கலப்படம் செய்வது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘ தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் படைத்த அமைச்சரே இந்த குற்றச்சாட்டை வெளிப்படையாக கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு இயந்திரம் பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் குறித்து அறிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும், காணாமலும் உள்ளது.

பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களில் உள்ளதால் அவற்றின் மீது தமிழக காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 272-ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பாக நான் தமிழக டிஜிபி, சிபிஐ இயக்குநருக்கு கடந்த மே 29-ம் தேதி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆகவே இதுதொடர்பாக நான் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.

அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டினார். அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க 4 வாரம் அவகாசம் தேவை என அரசு பிளீடர் எம்.கே.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதிகள், ‘‘பாலில் கலப்படம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. எனவே பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து 2 வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, இந்த விஷயத்தில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

அதற்கு அரசு பிளீடர் எம்.கே.சுப்பிரமணியம், பால் கலப்படம் குறித்து ஆய்வு செய்ய அரசு ஒரு குழு அமைக்க உள்ளதாக தெரிவித்தார். அப்போது தலைமை நீதிபதி, பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x