Published : 27 Jan 2017 01:19 PM
Last Updated : 27 Jan 2017 01:19 PM

நடுக்குப்பம் மீனவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: விஜயகாந்த்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ''மெரினா கடற்கரையில்‌, ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, ஏற்பட்ட கலவரத்தில் நடுக்குப்பம் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களை காத்துக்கொள்ள வீடுகளில் தஞ்சமடைய முயன்றவர்களிடம் காவல்துறையினர் அத்துமீறி வீடுகளுக்குள் புகுந்து அடித்து, உதைத்து, அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில்‌, நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும்‌, மீன் விற்பனை செய்யும் கடைகளையும்‌, மீன் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும்‌, தீவைத்து காவல்துறையினர் எரித்துள்ளனர்.

அந்தப் பகுதி மக்கள் 5 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் வேதனையளிக்கிறது.

இதனால் மீனவர்கள் செய்வதறியாது, வாழ்க்கையை நடத்த முடியாமல் பெருத்த சோதனைக்கு ஆட்பட்டுள்ளனர். கலவரத்தை அடக்குகிறேன் என்ற பெயரில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறையினரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

அதேபோல் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் உதவிகளையும், மீண்டும் மீன் விற்பனையை தொடங்க கடைகளை அமைக்கவும்‌, பொருட்களை வாங்கவும் அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும்.

உதவி கேட்டு வந்தவர்களுக்கு அடைக்கலம் தந்தனர் என்ற ஒரே காரணத்திற்காக காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x