Published : 01 Jan 2014 12:36 PM
Last Updated : 01 Jan 2014 12:36 PM

ஒருநாள் காப்பாளர் திட்டம்: வண்டலூர் பூங்கா அறிமுகம்

விலங்குகளுக்கு அருகில் சென்று பார்வையிட்டு, அவற்றுக்கு சேவை செய்ய விரும்புவோருக்காக ‘ஒருநாள் காப்பாளர்’ என்ற திட்டத்தை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது.

உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்களில் பாதுகாப்பான தொலைவில் இருந்து, தடுப்புக் கம்பிகளுக்கு அப்பாலிருந்து விலங்குகளை பார்த்து மகிழலாம். விலங்குகளுக்கு மிக அருகில் செல்ல முடியவில்லையே என்ற குறை பெரும்பாலானோருக்கு உண்டு. இதை போக்கும் வகையில், புதிய திட்டத்தை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் அமல்படுத்துகிறது.

அதன்படி, தாராளமாக நன்கொடை வழங்கும் வன உயிரின ஆர்வலர்கள் மட்டும் விலங்குகளை மிக அருகில் சென்று பார்வையிடவும் விலங்குகளின் தேவைகளை அறிந்து அவற்றுக்கு சேவை செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ‘ஒருநாள் முதல்வர்’ போல ‘ஒருநாள் விலங்கு காப்பாளராக’ இருக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, ஒரு நாளுக்கு அதிகபட்சம் 35 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நன்கொடையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிலப்பறவைகள் (அதிகபட்சம் 10 நபர்), நீர்ப்பறவைகள் (அதிகபட்சம் 10 நபர்), சதுப்புநிலப் பறவைகள் (அதிகபட்சம் 5 நபர்), வேட்டையாடும் பறவைகள் (அதிகபட்சம் 5 நபர்), ஆமைகள் (அதிகபட்சம் 5 நபர்) தேர்வு செய்துகொள்ளலாம்.

நன்கொடை வழங்குபவர்கள் Member Secretary-Animal Adoption, Arignar Anna Zoological Park, Vandalur என்ற பெயரில் கேட்பு வரையோலை (Demand Draft) எடுக்க வேண்டும். Member Secretary-Animal Adoption, Arignar Anna Zoological Park, Vandalur இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கு எண். 165701000019664, IFSC Code: IOBA0001657, வண்டலூர் கிளைக்கு நெட்பேங்கிங் முறையை பயன்படுத்தியும் தொகையை செலுத்தலாம். சரகம்-4 வனச்சரக அலுவலரிடம் நேரடியாக நன்கொடையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

நன்கொடை வழங்கும் முன்பு தத்தெடுக்க விரும்பும் விலங்கின் பெயர், நேரம் ஆகியவற்றை பூங்கா நிர்வாகத்துக்கு தெரிவித்து, அதற்கான தொகை விவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நன்கொடை செலுத்திவிட்டு குறிப்பிட்ட நாளில் வரமுடியாமல் போனால் தேதியை மாற்றியமைக்கவோ, பதிவை ரத்து செய்யவோ, பணத்தை திரும்பக் கோரவோ முடியாது. நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமானவரி விலக்கு சான்று நகல் அளிக்கப்படும். குறைந்தது ஒருநாள் முன்பாக

பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் directoraazp1@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களை www.aazoopark.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பூங்காவின் உயிரியலாளர்கள் ஏ.மணிமொழி (9444217591), எம்.சேகர் (9445228332) ஆகியோரை தொடர்பு கொண்டும் அறியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x