Published : 21 Mar 2017 11:37 AM
Last Updated : 21 Mar 2017 11:37 AM

அடிப்படை வசதிகள் கேட்டு மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் நடைபயணம்

பொள்ளாச்சியை அடுத்து உள்ள சர்க்கார்பதி, நாகர் ஊத்து உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் சேத்துமடையில் இருந்து ஆனைமலை வனத்துறை அலுவலகத்துக்கு நேற்று நடைபயணம் மேற்கொண்டனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களுக்கு உட்பட்ட சர்க்கார்பதி, நாகர் ஊத்து, பழைய சர்க்கார்பதி உள்ளிட்ட 16 மலைவாழ் மக்கள் கிராமங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதிகள், பொதுக்கழிப்பிடம், சாக்கடை வசதி, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இங்குள்ள தொகுப்பு வீடுகள், இடிந்து விழும் நிலையில் உள்ளன. அத்துடன் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை எனக் கூறி மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் நடைபயணமாகச் சென்றனர். ஆனைமலை வனத்துறையினரிடம் இது தொடர்பாக மனு அளித்தனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, ‘வனக் கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஆனைமலை அரசுப் பள்ளிக்குத் தான் வர வேண்டும். பேருந்து வசதி இல்லாததால் காலையும், மாலையும் மாணவர்கள் நடந்தே பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x