Last Updated : 05 Aug, 2016 10:39 AM

 

Published : 05 Aug 2016 10:39 AM
Last Updated : 05 Aug 2016 10:39 AM

ஒரு கடிதம் ஏற்படுத்திய மாற்றம்: 47 ஆண்டாக காமராஜர் பிறந்தநாளில் ஏழைகளுக்கு உணவளிக்கும் இருவர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை பெரியவர்கள் இருவர் நடத்தி வருகின்றனர். விழாவில் மாணவர்களுக்குப் பரிசளிப்பு, ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பு என்று தொடந்து 47 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

காமராஜரின் பிறந்த நாள் விழாவை கடந்த 1969 முதல் 47 வருடங்களாக சிதம்பரத்தில் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர் இருவர். காமராஜரின் செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் அறியும்படி செய்து வருகிறார்கள். இது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

கடந்த 1969-ல் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜீவா விஸ்வநாதன் என்பவர் தின, வார இதழ்களின் முகவராக இருந்தார். அப்போது, நாத்திகம் இதழின் ஆசிரியரும் பெரியாரின் சீடருமான நாத்திகம் ராமசாமி, 'காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், ஏழை எளிய மக்களின் கல்விக்கு பாடுபடுபவருமான காம ராஜர் பிறந்தநாளை தமிழக மக்க ளுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்' என்று நாத்திகம் நாளிதழ் முகவர் களுக்கு கடிதம் எழுதி, அதனுடன் காமராஜர் உருவப்படத்தை 1969 ஜூலை முதல் வாரத்தில் நாளிதழ் கட்டு மூலம் அனுப்பி வைத்துள் ளார்.

இதனைப் பார்த்த சிதம்பரம் முகவர் ஜீவா விஸ்வநாதன், காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவரது நண்பரான கடிகாரக் கடை நடத்தி வந்த இலக்குமணனிடம் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி கூறியுள்ளார். பின்னர் ஜூலை 15-ம் தேதி இருவரும் இணைந்து மூங்கிலில் தட்டி ஒன்று செய்து, அதில் காமராஜர் படத்தை ஒட்டி காங்கிரஸ் கொடியேற்றி சிதம்பரம் தெற்கு வீதியில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர். மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த விழாவில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கோபா ல கிருஷ்ணன், விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இப்படியாக காமராஜர் பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் தொடங்கப்பட் டது. இதற்கிடையில் சிதம்பரம் நகருக்கு வந்த காமராஜரை ஜீவா விஸ்வநாதனும், இலக்குமணனும் சந்தித்து இருக்கின்றனர். 'மாண வர்களின் கல்விக்கு உதவுங்கள்' என்று அவர்களிடம் காமராஜர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'சிதம்பரம் காமராஜர் பேரவை' எனும் அமைப்பை இருவரும் ஏற்படுத்தி தலைவராக இலக்குமணன், செயலாளராக ஜீவா விஸ்வநாதன் செயல்பட்டு வருகின்றனர்.

அன்று தொடங்கி இன்று வரை யிலும் சிதம்பரம் நகர மக்களி டம் நன்கொடை வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.10, 12-ம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் முதல் 2 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கி வருகின்றனர்.

சென்ற ஆண்டு எவ்வளவு வசூல் செய்யப்பட்டது என்பது குறித்து வரவு, செலவு கணக்கு துண்டுப் பிரசுரத்தை பொதுமக்க ளிடம் வழங்குவது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனால் கடந்த 47 ஆண்டு களாக சிதம்பரம் நகர பொதுமக்கள் இவ்விழாவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதன்பேரில், கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகளில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகி றது. ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்றுவரை இவர்கள் இருவரும் காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x