Last Updated : 08 Jul, 2016 09:42 AM

 

Published : 08 Jul 2016 09:42 AM
Last Updated : 08 Jul 2016 09:42 AM

தேமுதிகவில் இருந்து குறுகிய காலத்தில் 12 மா.செ.க்கள், முக்கிய நிர்வாகிகள் விலகல்: தலைமை மீது தொடரும் அதிருப்தி

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் திமுகவில் இணைந்தார்.

கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் சி.எச்.சேகர் (திருவள்ளூர்), பார்த்திபன் (சேலம் மேற்கு), என்.கார்த்திகேயன் (திருவண்ணாமலை வடக்கு), விஸ்வநாதன் (வேலூர் மத்தி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) என மேலும் 5 மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவில் இருந்து கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நீக்கப்பட்ட தால், மக்கள் தேமுதிக தொடங்கினர். இவர்கள் விரைவில் திமுகவில் இணைய உள்ளனர்.

தேர்தல் முடிவு வெளியான பிறகும், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் திமுக, அதிமுகவுக்கு செல்வது தொடர்கிறது. தேமுதிக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் கடந்த மாதம் 14-ம் தேதி திமுகவில் இணைந்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.பாண்டியன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன் ஆகியோர் அதிமுகவில் கடந்த மாதம் 28-ம் தேதி இணைந்தனர். தேமுதிக நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சம்பத் கடந்த 1-ம் தேதி திமுகவில் இணைந்தார். தேமுதிக வில் இருந்து நேற்று நீக்கப்பட்ட மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளார்.

கடந்த சில மாதங்களில் மட்டும் தேமுதிக வில் இருந்து 12 மாவட்ட செயலாளர்கள் விலகியுள்ளனர். தேமுதிக தேர்தல் பொறுப்பா ளராக பதவி வகித்த கே.ஆர்.வீரப்பன், டெல்லி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி, தேமுதிக தலைமை நிலைய செயலாளராக இருந்த கே.எஸ்.மலர்மன்னன், தொழிற்சங்க செயலாளராக இருந்த சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

தற்போது அதிமுகவில் இணைந்துள்ள கே.எஸ்.மலர்மன்னன், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘வியாபாரம் போல கட்சி நடத்துகிறார்கள். கட்சி விஜயகாந்தின் கட்டுப் பாட்டில் உள்ளதா என்பதே தெரியவில்லை. இன்னும் பலரும் வேறு கட்சிகளுக்கு மாற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அந்த அளவுக்கு தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்’’ என்றார்.

தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் கூறும்போது, ‘‘இவர்கள் அனைவரும் சுயநலத்துக்காகவே வெளியேறியுள்ளனர். விஜயகாந்தின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளது. தலைமைக்கு துரோகம் செய்து வெளியே சென்றவர்கள் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x