Last Updated : 06 Dec, 2013 12:00 AM

 

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

பயிர்க் காப்பீட்டுத் தொகை விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?: மாநில அரசு மனது வைத்தால்தான் முடியும்

ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போலவேதான் பயிர்க் காப்பீடும். இதற்காக மத்திய அரசின் சார்பில் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, அந்தமான் ஆகிய தென்னக மாநிலங்களுக்கான மண்டல அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இந்திய விவசாயிகளின் பயிருக்கான காப்பீட்டை வழங்குகிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருக்கும் பரப்புக்கான பிரீமியத்தைக் கட்டி தங்கள் பயிரைக் காப்பீடு செய்துகொள்ளலாம்.

அந்த பயிர் இயற்கை இடர்பாட்டினால் பாழாகும்போது அதன் பாதிப்பின் அளவுக்கு ஏற்ப வேளாண் காப்பீட்டு நிறுவனம் அதற்கான இழப்பீட்டைத் தரும். அந்த இழப்பீட்டுத் தொகையில் மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் வேளாண் காப்பீட்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிடும். இந்த தொகை மாவட்ட நிர்வாகம் மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு வரவு வைக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை விவசாயிகளுக்கான பிரீமியத் தொகையை மாநில அரசே செலுத்திவிட்டது. கடும் வறட்சி காரணமாக வேளாண்மை மொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில் கணக்கெடுப்பை முடித்து அந்த காப்பீட்டுக்கான இழப்பீடும் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது. காப்பீட்டு நிறுவனம் அறிவித்த மொத்த தொகையில் பாதித் தொகையை மத்திய அரசும் கொடுத்துவிட்டது. எஞ்சிய தொகையை மாநில அரசு கொடுக்க வேண்டியுள்ளது. அது இன்னமும் கொடுக்கப்படாததால் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் விவசாயிகளும் கட்சிகளும் அமைப்புகளும் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான காப்பீடு மற்றும் இழப்பீடு விவரங்கள் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி உள்பட18 மாவட்டங்களைச் சேர்ந்த 5,54,257 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தார்கள். அதற்கு இழப்பீடாக மொத்தம் 740 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரத்து 249 ரூபாய் 52 பைசாவை வேளாண் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த தொகையில் காப்பீட்டு நிறுவனத்திடம் விவசாயிகள் செலுத்திய பிரீமியத் தொகை 66 கோடியே 44 லட்சத்து 99 ஆயிரத்து 578 ரூபாய் இருப்பு உள்ளது போக மீதத்தொகையில் பாதியான 337 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாயை மத்திய அரசு விடுவித்து காப்பீட்டு நிறுவனத்தின் கணக்கில் செலுத்திவிட்டது. ஆனால், அதே அளவிலான மீதத் தொகையை மாநில அரசு இன்னமும் செலுத்தவில்லை.

ஏன் மாநில அரசு செலுத்தவில்லை என்பதற்கு அரசு அதிகாரிகள் விளக்கம் சொல்வதைக் கேட்டால் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. “கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் விளைவால் 12-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட னர். மற்றவர்களும் மனது உடைந்த நிலையில் வாடுவதைக் கண்ட முதல்வர் உடனடியாக வறட்சி நிவாரணத்தை அறிவித்தார். அதன்படி ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணமாக வழங்கப்பட்டது. மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண் நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு ஏக்கருக்கு ரூ.3000 மட்டும்தான் நிவாரணமாக வழங்கமுடியும்.

ஆனால், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை முழுமையாக ஈடுகட்டும் வகையில் இழப்பீடு வழங்க முடிவு செய்த மாநில அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டில் இருந்து கிடைக்கும் தொகையை முன்கூட்டியே நிவாரணத்தோடு சேர்த்து கொடுத்துவிட்டு பயிர்க் காப்பீட்டு தொகை வரும்போது அதை அரசு பெற்றுக்கொள்வது என்பதுதான் அந்தத் திட்டம்.

அதன்படி விவசாயிகளுக்கு முழு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கிடைக்கும் இழப்பீட்டு தொகையான ரூ.8,692-ஐ மாநில அரசு முன்கூட்டியே கொடுத்துவிட்டது. அதுவும் அப்படியே இல்லை, அந்த 8,692 ரூபாயை 10,000 என உயர்த்தி அதோடு மாநில அரசு தன் பங்காக மேலும் 5,000 ரூபாயைச் சேர்த்து மொத்தம் 15,000 ரூபாய் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. அப்போது காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இழப்பீட்டை மாநில அரசு நேரடியாக பெற்றுக்கொள்ள ஆட்சேபனை இல்லை என்கிற சம்மதக் கடிதத்திலும் விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது” என்று நீண்ட விளக்கத்தைத் தருகிறார்கள்.

இதன்படி பார்த்தால் மொத்த இழப்பீட்டு தொகையும் மாநில அரசுக்குச் சொந்தமாகிவிடும். அதனால்தான் மாநில அரசு தன் பங்குத் தொகையை இன்னமும் செலுத்தாமல் வைத்திருப்பதாகத் தெரிகிறது. விவசாயிகள் காப்பீட்டு தொகை கேட்டு போராடி வருவதைப் பார்த்து மாநில அரசு மனது வைத்தால் ஒழிய பயிர்க் காப்பீடுத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x