Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM

இலங்கை ராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் கொல்லப்பட்டதற்கு புதிய ஆதாரங்கள்: வைகோ தகவல்

இலங்கையில் தமிழ்ப் பெண்கள் ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து, புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2009ல் போரின் உச்ச கட்டத்தின் போது, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி, தற்போது புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது.

இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது. தமிழ்ப் பெண்கள் 15 பேரை இலங்கை ராணுவம் கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை, உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது.

இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் இலங்கை அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x