Published : 15 Sep 2016 08:59 AM
Last Updated : 15 Sep 2016 08:59 AM

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த ஆய்வு

சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்துவது குறித்து மத்திய கப்பல் துறை செயலர் ராஜீவ் குமார் ராமேசுவரத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

சேது பாலம், ஆதாம் பாலம், ராமர் பாலம் என அழைக்கப்படும் தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதியில், கடலின் ஆழம் அதிகபட்சம் 12 அடியாக உள்ளது. இந்த மணல் திட்டுகள், அதனை ஒட்டிய பாக் ஜலசந்தி கடற்பரப்பு பகுதிகளை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2.7.2005-ல் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் ரூ.2,427 கோடி திட்ட மதிப்பீட்டில் மதுரையில் தொடங்கிவைக்கப்பட்டது. கடந்த 27.7.2009 வரை ரூ.831.80 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ராமர் கட்டிய பாலத்தில் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயலாக உள்ளதாகவும் கூறி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். ராமர் பாலம் பகுதிக்கு சேதம் வராமல் தனுஷ்கோடி வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராமேசுவரம் பகுதியில் ஆய்வுசெய்து, “ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதை செயல்படுத்த நான்கைந்து மாற்று வழிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய கப்பல்துறை செயலர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சேது சமுத்திரத் திட்டம் நடைபெற்ற பகுதிகள், தனுஷ்கோடி - தலைமன்னாருக்கு இடையே உள்ள மணல் திட்டுகள் உள்ளிட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ்குமார், “உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும்.

தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சகம்தான் அறிவிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x