Published : 08 Mar 2017 03:40 PM
Last Updated : 08 Mar 2017 03:40 PM

மீனவர் படுகொலை எதிரொலி: கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவிப்பு

கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை மீனவர்கள் புறக்கணிப்பதால் தமிழகத்திலிருந்து திருவிழாவிற்கு யாரும் செல்ல மாட்டார்கள் என திருவிழா ஏற்பாட்டாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா மார்ச் 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம்,சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கத்திற்கு அனுப்பிய அழைப்பினை ஏற்று கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை ராமேசுவரம் பங்குத்தந்தை சகாயராஜ் செய்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து ஆண்கள் 3,610, பெண்கள் 1,118 குழந்தைகள் 263 என மொத்தம் 4, 991 பயணிகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக 145 விசைப்படகுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்கும் வரை கச்சத் தீவு திருவிழாவிற்கு செல்ல மாட்டோம் என்று அனைத்து ராமேசுவரம் மீனவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து ராமேசுவரத்தில் பங்குத் தந்தை சகாயராஜ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''

இலங்கை கடற்படையால் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் ராமேசுவரம் தீவு பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுவதால் பதற்றம் நீடிக்கிறது. இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை முழுவதுமாக புறக்கணிப்பதாக மீனவர்கள் அறிவித்துள்ளதுடன், படகுகளையும் வழங்கப் போவதில்லை என கூறியுள்ளனர். எனவே தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லமாட்டார்கள் என தெரிவித்தார்.

இது குறித்து யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம் கூறியதாவது, '' கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவை அரசியல் ஆக்க வேண்டாம். தமிழகத்திலிருந்து யாரும் வரவில்லை என்றாலும் திருவிழா இந்த ஆண்டு நடைபெறும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x