Published : 27 Jan 2017 03:59 PM
Last Updated : 27 Jan 2017 03:59 PM

வறட்சி நிவாரண நிதியைப் பெறுவதற்கு ஓபிஎஸ் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்: திருநாவுக்கரசர்

மத்திய அரசிடம் இருந்து வறட்சி நிவாரண நிதியைப் பெறுவதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 140 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு காணாத வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினாலும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்பட்ட காரணத்தினாலும் கடும் வறட்சியின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசை விட மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. கடுமையான வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு சாகுபடி பரப்பு 21.42 லட்சம் ஹெக்டேராக இருந்தது. அது நடப்பு ஆண்டில் 15.08 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. சாகுபடி செய்த நெற்பயிர்களும் வறட்சியினால் கருகியதால் தமிழகத்தின் நெல் உற்பத்தி பெருமளவில் குறைந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியிலிருந்து மீள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி வழங்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வறட்சி நிலையை மதிப்பீடு செய்ய மத்தியக் குழு வருகை புரிந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் விதிமுறைகளின்படி நெல் பயிர்களுக்கு மழை நீரை நம்பி சாகுபடி செய்த நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,800, பாசன வசதியுள்ள நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, காவிரி பாசனத்தை நம்பியுள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.18,000 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்திற்கு குறையாமல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மத்திய பாஜக அரசு தேசிய பேரிடர் மீட்பு நிதியாக 2016-17 நிதியாண்டிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 450 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு தான் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டிய நிலை உள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொரியை போடுவது போல உள்ளது.

கடந்த 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடமைகளை மக்கள் இழந்த போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத் தொகை ரூ.25,912 கோடி. ஆனால் மத்திய அரசு வழங்கியது ரூ.1940 கோடி தான். அதேபோல, வார்தா புயலினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட போது பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் கேட்ட நிவாரண நிதி ரூ.22,573 கோடி. மேலும் முதல் தவணையாக ரூ.1,000 கோடி தமிழக அரசு கேட்டது.

தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பை மத்திய குழுவினர் இருமுறை வருகை தந்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பின்பும், இதுவரை மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நிவாரணத் தொகை தரவில்லை. நரேந்திர மோடி அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மத்தியக்குழுவை அனுப்பி கண் துடைப்பு நாடகம் நடத்துகிற நரேந்திர மோடி அரசிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

பன்மாநில நீர்த்தகராறு சட்டத்தின்படி காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு இறுதியானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு சமமானது, இதற்கு மேல்முறையீடு கிடையாது என்ற நிலையில் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று கூறி தமிழகத்தின் உரிமையை நரேந்திர மோடி அரசு பறித்தது.

இதனடிப்படையில் தான் கடுமையான வறட்சியையும், பஞ்சத்தையும் எதிர்கொள்ள முடியாமல் ஏறத்தாழ 200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எதற்கெடுத்தாலும் வானொலியில் மனம் திறந்து பேசுகிற நரேந்திர மோடி தமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து மனம் திறந்து கருணை காட்டாதது ஏன் ? தமிழகம் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் வஞ்சிக்கப்படுவது நியாயமா ?

நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை பெற்று, மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அதிமுக தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தேவையான நிதியை பெறுவதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கிற வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x