Last Updated : 17 Jun, 2017 08:34 AM

 

Published : 17 Jun 2017 08:34 AM
Last Updated : 17 Jun 2017 08:34 AM

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. ஹானர்ஸ் படிப்பாக மாறும் இளங்கலை வேளாண்மை பிரிவுகள்

ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சேர்க்கையில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பி.எஸ்சி. வேளாண்மை உள்ளிட்ட இளங்கலை படிப்புகள், ‘பி.எஸ்சி. ஹானர்ஸ்’ என்று மாற்றப்படுகின்றன.

இந்தியாவில் 73 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளைக் கையாளுகிறது.

பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட 14 அரசுக் கல்லூரிகள், 21 தனியார் கல்லூரிகளில் வேளாண்மை தொடர்பான பாடப் பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 2,820 மாணவ, மாணவிகள், பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட 13 பாடப் பிரிவுகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படும் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பியல், வனவியல், ஊட்டச்சத்து, உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை ஆகிய பாடப் பிரிவுகளின் பெயர்கள், பி.எஸ்சி. ‘ஹானர்ஸ் இன் அக்ரிகல்ச்சர், செரிகல்ச்சர், ஃபாரஸ்டரி, ஃபுட், நியூட்ரிஷியன் அண்டு டயடிக்ஸ்’ என மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவு தலைவர் எஸ்.மகிமைராஜா ‘தி இந்து’விடம் கூறியதாவது: வேளாண்மைத் துறை மட்டுமின்றி, அறிவியல், கட்டுமானவியல், வங்கியியல் உள்ளிட்ட துறைகளிலும் வேளாண்மையில் பட்டம் பெற்ற மாணவர்களின் தேவைகள் அதிகரித் துள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் பி.எஸ்சி. வேளாண்மை உள்ளிட்ட 5 பட்டப் படிப்புகளின் பெயர்களை ‘பி.எஸ்சி. ஹானர்ஸ்’ என மாற்ற இந்திய வேளாண்மை அறிவியல் கவுன்சில் முடிவு செய்து, இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவு அனுப்பியுள்ளது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டே இந்த மாறுதல் செய்யப்படுகிறது.

கவுன்சலிங் தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரை, 2017-18-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தற்போது தொடங்கியுள்ளது. இந்த 5 பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கையின்போது, பி.எஸ்சி. ஹானர்ஸ் எனக் குறிப்பிடுகிறோம். பாடத் திட்டங்களில் பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை என்றாலும், இந்தப் பாடப் பிரிவுக்கான மதிப்பு உயரும்.

மேலும், தேசிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கு இந்த மாறுதல் உதவியாக இருக்கும். தேசிய வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் சார்பில், நாடு முழுவதும் வேளாண் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுவர். பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டம் பெற்றவர்களுக்கு, ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இந்த மாற்றமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x