Last Updated : 08 Jun, 2016 08:34 AM

 

Published : 08 Jun 2016 08:34 AM
Last Updated : 08 Jun 2016 08:34 AM

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: முதல்வருக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை

தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள் ளன.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர் தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயி கள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயறு வகைகள் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வாங்கி விற்கப்படும். புதிய தென்னங்கன்றுகள் நடவு செய்ய ரூ.800 கோடியில் புதிய சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்படாது என்பன உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு கையெழுத்திட்ட முதல் கோப்பே பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு தொடர்பானதாகும். குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து 2016 மார்ச் 31-ம் தேதி வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தர மற்றும் நீண்டகால கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் அரசுக்கு ரூ.5 ஆயிரத்து 780 கோடி செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், தற்போது வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் அவர்கள் வைத்துள்ள நிலம் சர்வே எண் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தள்ளுபடி ஆணைகள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர்.

பயிர்க்கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் தொடர்பான அறிவிப் பும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கொள்முதல் செய்ய ரூ.10 கோடி மூலதனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் நிலையங்கள் ஜூன் 15-ம் தேதி முதல் செயல்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தவிர, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ரூ.54.65 கோடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் முதல்வர் ஜெய லலிதா சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், விவசாய சங்கங்கள் சார்பில் ஏரிகளை தூர்வார வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன்:

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் படுவதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனையும் முதல்வர் ஜெயலலிதா தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க முதல்வர் விரைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள பாதிப்பை தடுக்கவும், மழைநீரைத் தேக்கி வைக்கவும் அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகளையும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அடுத்த 3 மாதத்துக்குள் தூர் வார வேண்டும்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். பாசன கால்வாய்கள், ஆறுகள், வடிகால்களைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலமாக ஒன்றியம் வாரியாக பணிமனையைத் தொடங்கி அங்கு டிராக்டர், மண் சமன்படுத்தும் இயந்திரம், நடவு இயந்திரம், கதிர் அறுக்கும் இயந்திரம் போன்றவற்றை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு தர வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடனையும் தள்ளுபடி செய்வதுடன், அடுத்த சாகுபடிக்கு புதிய பயிர்க்கடன் தர வேண்டும். விளைபொருட்களுக்கு லாப கரமான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அதற் காக விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், வங்கியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். நீர் ஆதார உரிமையைப் பாதுகாக்க நீர்ப்பாசனத் துறையை உருவாக்க வேண்டும்.

விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி:

விவசாயிகள் சாவுக்கு கார ணமே அடமானக் கடன்கள்தான். எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் ஓடும் சிறு நதிகள், ஓடைகளை இணைத்தாலே நீர் ஆதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். விளைபொருட்களுக்கு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x