Published : 16 Mar 2017 04:57 PM
Last Updated : 16 Mar 2017 04:57 PM

தமிழகத்தை கடனாளியாக்குவதுதான் அதிமுகவின் சாதனை: ஸ்டாலின் பேட்டி

ஒரு மிகப்பெரிய கடனாளியாக இருக்கும் சாதனையை அதிமுக ஆட்சி படைத்திருக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சசிகலாவின் பினாமி ஆட்சியாக, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சியின் சார்பில் இன்றைக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நிதி நிலை அறிக்கையை படிக்கத் தொடங்கிய நேரத்தில் நிதியமைச்சர் ஜெயகுமார், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, 4 வருடம் சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பெயரை விளித்து, அதைவிட கொடுமையாக, 4 வருடம் சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சசிகலாவின் பெயரையும் உச்சரித்து, அதையும் தாண்டி, பெரா வழக்கில் சிக்கி அபராதம் விதிக்கப்பட்ட தினகரன் பெயரையும் விளித்து, அமைச்சர் ஜெயக்குமார் பேசத் தொடங்கினார்.

நான் உடனே எழுந்து நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் இந்த அவையில் படித்து, இந்த அவையின் மரபை அசிங்கப்படுத்தக் கூடாது, அவையின் மரபை காப்பாற்றிட வேண்டும் என்று குரல் எழுப்பினேன். ஆனால், 'தவறில்லை, அவைக்குறிப்பில் அந்த பெயர்கள் இருக்கலாம்', என்று சபாநாயகர் தீர்ப்பு தருகிறார். இருந்தாலும், அது தவறு என்று நாங்கள் கண்டித்து, சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், 4 அமைச்சர்கள் அவைக்கே வரவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரியவில்லை.

ஒருவேளை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்களா? அல்லது தேர்தல் கமிஷனுக்கு சென்று அவர்களுடைய கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்துப் பேசப் போயிருக்கிறார்களா? அல்லது பெங்களூரு சிறையில் இருக்கக்கூடிய சசிகலாவை பார்க்கப் போயிருக்கிறார்களா?

அதுமட்டுமல்ல, எங்களுக்கு எழுந்துள்ள இன்னொரு சந்தேகம் என்னவென்று கேட்டால், பல இடங்களில் டெண்டர்கள் விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த டெண்டர்களை சரி செய்வதற்குப் போயிருக்கிறார்களா? என்றொரு சந்தேகம் வந்துள்ளது.

அவை ஒருபக்கமிருந்தாலும், இந்த நிதி நிலையை பொறுத்தவரையில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், 'புதிய மொந்தையில் பழைய கள்' என்று சொல்வார்களே, அந்த வகையில் தான் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

அதிமுக ஆட்சியை பொறுத்தவரையில், அது ஜெயலலிதா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆட்சியாக இருந்தாலும், அல்லது இப்போது எடப்பாடி தலைமையில் நடைபெறும் பினாமி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆண்டும் கடன் மட்டுமே அதிகரிக்கும் சூழ்நிலையில் தான் நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இந்த நிதி நிலை அறிக்கையில் கூட, '31-03-2018 ல் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் கடன் இருக்கும்', என்று அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய கடனாளியாக இருக்கும் சாதனையை இந்த ஆட்சி படைத்திருக்கிறது.

இந்த நிதி நிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் குறித்து எதுவுமே கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற நிலையே இதில் இல்லை.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பற்றி இதில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த மாநாட்டை நடத்தியபோது 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் ஏதாவது நிதி ஒதுக்கீடு எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. அதேபோல, புதிய மின் திட்டங்களுக்கு என்ன வழி? அதுபற்றி ஏதாவது குறிப்பிட்டுக் காட்டப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது.

ஏற்கெனவே ஆளுநர் உரையில் அறிவித்து இருக்கக்கூடிய திட்டங்கள், இடையிடையே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் இந்த நிதி நிலை அறிக்கையில் ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவுமில்லை.

ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட தொலை நோக்கு திட்டம் 2023, அதேபோல 110 என்ற விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.

இந்த ஆட்சியில் அரசு நிர்வாகம், நிதி நிர்வாகம் என்கின்ற அகல் விளக்குகள் அணைக்கப்பட்டு, சாம்பலாக்கப்பட்டு இருக்கிறது என்பது தான் உண்மை. ஆகவே, இந்த நிதி நிலை அறிக்கையை பொறுத்தவரையில், பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை நடத்த முயற்சித்து இருக்கிறார்களே தவிர, வேறொன்றும் இதில் இல்லை.

எப்போது ஜெயலலிதா தலைமையில் ஆட்சி வந்ததோ, அன்றிலிருந்து இன்று வரை கடனாளியாக இருக்கும் நிலையில் தான் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுகிறது. இதையெல்லாம், துறைவாரியாக மானிய கோரிக்கை வரும்போது எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதாரங்களோடு அவையில் பேசுவார்கள்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x