

சுயமரியாதை உணர்வு பட்டுப்போகாத வரை எங்களை யாரும் வீழ்த்த முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திராவிடர் கழகத்தின் மறைந்த பொருளாளர் கே.சாமிதுரையின் படத்திறப்பு நிகழ்ச்சி, சென்னை பெரியார் திடலில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று, படத்தைத் திறந்து வைத்துப் பேசும்போது, "சாமிதுரை மறைந்த நாளில், திராவிடர் கழகத்தினர் பலரும் வேறொரு நிகழ்ச்சிக்காக திருச்சிக்குச் சென்றிருந்த காரணத்தால், தனி ஒருவனாக நான் உடனடியாக வீட்டிலிருந்து புறப்பட்டு, சாமிதுரைக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு ஓடி வந்ததை, கி.வீரமணியும், மற்றவர்களும் நினைவூட்டினார்கள். அது ஏதோ பிரச்சாரத்திற்காக, கடமையை ஆற்றுவதற்காக நடந்ததாக யாரும் கருதக்கூடாது.
என்னைப் பொறுத்தவரையில், மறைந்தும் மறையாமல் நெஞ்சில் நிறைந்திருக்கும் சாமிதுரை போன்றவர்களைத் தொடர்ந்து நினைவிலே நிறுத்திக் கொண்டால்தான் நாம் ஏற்றுக் கொண்ட கொள்கைகளில், இடைவிடாமல் நடத்தும் வாய்மைப் போரில், நாம் உடனடியாக வெற்றி பெற முடியாவிட்டாலும், நமக்குப் பிறகு தொடர்ந்து வருகிறவர்கள் பெறுவர். திராவிடச் சமுதாயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் தான் வாழ்கிறோம்.
நான் பெருமிதமாக நம்முடைய இயக்கத்தின் பணியைக் குறிப்பிட்டுப் பேசினாலும் கூட அதைக் குலைப்பதற்கு, அதை சீரழிப்பதற்கு நம்மைச் சுற்றி பல சக்திகள் தோன்றிக் கொண்டே இருப்பதையும், அப்படி தோன்றுகிற சக்திகளையெல்லாம் தொலைத்தால் தான், இந்தச் சமுதாயத்தை சீரோடும், சிறப்போடும், எழுச்சியோடும் ஏற்றத்தோடும் வளர்க்க முடியும், வாழ வைக்க முடியும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு பாடுபடுகிறோம்.
பெரியாரையும், அண்ணாவையும், மேலும் பல தளபதிகளையும் இழந்தும்கூட, இன்னும் இந்த இயக்கம் வாழ்கிறது என்று சொன்னால், நம்முடைய கொள்கைகளுக்கு, அந்த உயிர்ச் சக்தி இருக்கிறது என்பது தான் பொருள்.
ஒரு இயக்கம், என்ன தான் தன்னுடைய பல்வேறு விதமான வாய்ப்புகளை, வசதிகளை இழந்து விட்டாலுங்கூட, அதனுடைய உயிராக இருக்கின்ற அந்தக் கொள்கைகளை இழக்காமல் இருந்தால், அந்த இயக்கம் அழிந்ததாக எவராலும் சொல்ல முடியாது.
எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை வீழ்ச்சிகள் வந்தாலும், எத்தனை படைகள் நம்மை எதிர்த்து நின்றாலும், எத்தனை சக்திகள் நம்மைச் சாகடிக்க முயன்றாலும் நாம் சாக மாட்டோம், வீழ மாட்டோம், காரணம் நம்முடைய உயிர், கொள்கை.
அந்தக் கொள்கையை இழக்காத வரையில், அந்தக் கொள்கைக்கு துரோகம் செய்யாத வரையில், அவைதான் இந்த சமுதாயத்தை முன்னேற்றுவதாக இருக்கும்.
சுயமரியாதையால் வளர்ந்தவர்கள் என்ற காரணம் தான், அந்த உணர்வு தான், நம்மை என்றைக்கும் ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கிறது. அந்த உணர்வு பட்டுப் போகாத வரையில், எங்களை யாராலும் வீழ்த்த முடியாது. யாராலும் எங்களைத் தோற்கடிக்க முடியாது" என்றார் கருணாநிதி.
இந்த நிகழ்ச்சியில், கி.வீரமணி, முனைவர் நன்னன், முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன், குழந்தை தமிழரசன், கலி.பூங்குன்றன், தி.மு.க., அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.