Published : 24 Jan 2014 12:39 PM
Last Updated : 24 Jan 2014 12:39 PM

திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிக நீக்கம்

திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். குழப்பம் விளைவிக்க முயன்றதால் கட்சியின் நன்மையைக் கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கட்சிக்குள் ஏற்படும் அபிப்ராயப் பேதங்கள், கோபதாபங்களைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்றன. இந்நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும் கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும் அந்த அமைப்புகளை மதிக்காமலும் செயல்பட்டுள்ளனர்.

கூட்டணியை குலைக்க முயற்சி

வேண்டுமென்றே திட்டமிட்டு கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்துள்ளனர். திராவிட இயக்கம் தொடக்கம் முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள், இயக்கத்துக்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொதுத் தோற்றத்தை உருவாக்கி, தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு சிலர் மீது குறிப்பாக மதுரை மாவட்டத்தில் திமுக தோழர்கள் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க துணை போகின்றனர். இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கட்சியின் நன்மைக்காக..

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில்

நெரடியாகவே ஈடுபட்டும், கட்சியின் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, இனியும் தொடர்ந்து கட்சியில் நீடிப்பது முறையல்ல. அது கட்சியின் கட்டுப்பாட்டை மேலும்

குலைத்துவிடும் என்பதால் அவர், திமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில்

இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தை ஏற்று, ஒற்றுமையோடும் கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.

சுவரொட்டி பிரச்சினை

சில நாட்களுக்கு முன்பு மதுரையில் அழகிரி, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன் கூடிய சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த சுவரொட்டிகளை அழகிரி ஆதரவாளர்கள்தான் ஒட்டினர் என திமுக தலைமைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர மாவட்ட திமுக அமைப்புகள் கலைக்கப்பட்டன. மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களைக் கொண்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது.

பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, தேமுதிகவுடன் திமுக கூட்டணி வைக்க முயற்சிப்பது குறித்து விமர்சனம் செய்தார். இதனால் கோபமடைந்த கருணாநிதி, கட்சிக்கு எதிராக கட்டுப்பாட்டை மீறும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன்பிறகும் ‘டோன்ட் வொரி,

வீ ஆர் வித் யூ’என்ற வாசகங்களுடன் மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், கவுன்சிலர் முபாரக் மந்திரி உள்பட ஐந்து பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

கருணாநிதியிடம் வலியுறுத்தல்

இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதியை இரண்டு முறை மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார். தனது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். கடந்த திங்கள்கிழமை கருணாநிதியை சந்தித்து பேசிய கையோடு, ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்களாக இருந்து ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிவிட்ட சிலர் மீது, மேலூர் போலீஸ் நிலையத்தில் தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு பதிவானது. அழகிரி பிறந்தநாளையொட்டி அவரை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என தடுத்ததாக அழகிரி ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. புகார் கொடுத்தவர்கள் ஐந்து பேரையும், திமுக தலைமை வியாழக்கிழமை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது.

ஹாங்காங் சென்றிருந்த அழகிரி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பியதும் கருணாநிதியை மீண்டும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x