Published : 30 Nov 2013 11:25 AM
Last Updated : 30 Nov 2013 11:25 AM

குடியிருப்போர் விவரங்களை காவல்துறை கோருவது சட்ட விரோதம் - ராமதாஸ் கண்டனம்

சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் தங்களது பகுதிக்குரிய காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். தனி மனித சுதந்திரத்தில் குறுக்கிடும் இந்த ஆணை கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்த வெளிமாநில இளைஞர்கள் 5 பேர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய விவரங்களை அதன் உரிமையாளர்கள் அருகிலுள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தடை நீக்கப்பட்டுவிட்ட நிலையில் இத்திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த காவல்துறை களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் தங்களது வீட்டில் குடியிருப்பவர்களின் பெயர், நிரந்தர முகவரி, ஏற்கனவே குடியிருந்த வீட்டு முகவரி, புகைப்படம், செல்பேசி எண் ஆகியவற்றை 60 நாட்களுக்குள் தர வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 ஆவது பிரிவின்படி காவல்துறை மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வாடகைக்கு குடியிருப்பவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக பார்க்கும் செயலாகும். குற்றங்களைத் தடுக்கப் போகிறோம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இந்திய அரசியல் சட்டத்தின் 19(1) (உ) பிரிவின்படி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் நாட்டின் எந்த பகுதியிலும் வசிக்கவும், நிரந்தரமாக குடியமருவதற்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், 21 ஆவது பிரிவின்படி கண்ணியத்துடன் வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ள ஆணை இந்த அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கிறது. மொத்தத்தில் இந்த ஆணை சட்டவிரோதமானதாகும். தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான இது போன்ற உத்தரவை பிறப்பிக்க சென்னைக் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.

இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்பட்டால், உங்கள் வீட்டிற்கு இன்று எத்தனை பேர் வந்தார்கள்? அவர்களைப் பற்றிய விவரங்கள் என்னென்ன? என்பன போன்ற விவரங்களைக் கூட தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் ஆணையிடும் அளவுக்கு தனி மனித சுதந்திரத்தின் மீதான அத்துமீறல்கள் எதிர்காலத்தில் அதிகரித்துவிடும். கடந்த 2001 ஆவது ஆண்டில் பயங்கரவாதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டவர் எவரேனும் ஒருவரது வீட்டில் தங்கினால் அது பற்றி அவர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் ; இல்லாவிட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று வாஜ்பாய் அரசு ஆணையிட்டது. இதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து உடனடியாக அந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது. தற்போது சென்னையில் கொண்டுவரப்பட்டுள்ளது போன்ற நடைமுறை பெங்களூரிலும், இராஞ்சியிலும் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு தோல்வியடைந்து விட்டது.

இதற்கெல்லாம் மேலாக இது போன்ற நடவடிக்கைகளால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று காவல்துறையினர் கருதினால் அதைவிட பெரிய அறியாமை இருக்க முடியாது. குற்றங்களையோ அல்லது பயங்கரவாத செயல்களையோ செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவர்கள் நிச்சயமாக உண்மையான தகவல்களைத் தர மாட்டார்கள். காவல்துறை தங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதன் மூலம் குற்றங்களைக் கட்டுப்படுத்த முயல வேண்டுமே தவிர, இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. எனவே, குடியிருப்போரின் விவரங்களை வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்னை காவல்துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x