Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM

லஞ்சம் வாங்குவோரை காட்டிக்கொடுத்தால் ரூ.10 கோடி பரிசு

‘‘லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக் கொடுத்தால் லட்ச ரூபாய் பரிசு’’ என அறிவித்திருந்த ‘ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு’, ஊழலுக்கு எதிரான செயல்பாட்டை இன்னும் வேகப்படுத்துவதற்காக பத்து கோடி ரூபாய் நிதி திரட்டப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஊழலுக்கு எதிராக பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கும் 20 அமைப்புகள் செப்டம்பர் 28-ல் சென்னையில் கூடின. இந்தக் கூட்டத்தில் தான் ‘ஊழலுக்கு எதிரான கூட்டுநடவடிக்கைக் குழு’ உருவானது. இந்தக் கூட்டத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு, அரசு ஊழியர்கள் சிலர், ‘நாங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம்’ என சத்தியப்பிரமாணம் செய்தார்கள். இதே கூட்டத்தில்தான், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசாகக் கொடுப்போம் என பத்து அமைப்புகள் சேர்ந்து பகிரங்க பிரகடனம் செய்தன. இதன்படி அந்த அமைப்புகள் தலா ஒரு லட்சத்தை வங்கிகளில் உடனடி யாக டெபாசிட்டும் செய்துவிட்டன.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் வி.ஏ.ஓ. சுப்பிரமணியன், பட்டா மாறுதலுக்காக ஜெயராஜிடம் ரூ.2 ஆயிரம் கேட்டதால் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கினார்.

துணிச்சலுடன் சுப்பிரமணியனை காட்டிக்கொடுத்த ஜெயராஜை கௌரவிக்கும் விதமாக அவருக்கு லட்சம் ரூபாய் பரிசு கொடுத்து முதல் போணியைத் தொடங்கியது ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவில் உள்ள தமிழ் மீட்சி இயக்கம்.

அந்த இயக்கத்தின் தலைவர் நாமக்கல் அன்வர் ஷாஜி நம்மிடம் பேசும்போது, ‘‘லஞ்ச ஊழலுக்கு எதிராக மக்களிடம் கடும் கோபம் இருக்கிறது. ஆங்காங்கே போராட்டங்களும் நடக்கின்றன. ஆனால், இதை எல்லாம் ஒன்றிணைக்க முடியவில்லை. அத்தகைய போராட்டங்களையும் மக்களின் கோபத்தையும் சரியான திசையில் கொண்டுசெல்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதன் ஒருபடிதான் பரிசு கொடுக்கும் விவகாரம்’’ என்றார்.

தொடர்ந்து, இயக்கத்தின் செயலாளர் ஈரோடு நந்தகோபால் கூறியதாவது:

அமெரிக்கா போன்ற நாடுகளில் லஞ்சம் வாங்குபவர்களை பிடித்துக்கொடுத்தால் அரசே பரிசு கொடுத்து கௌரவிக்கிறது. ஆனால், இங்கே லஞ்சம் வாங்குபவர்களை காட்டிக் கொடுப்பவரின் உயிருக்கு பாதுகாப்பில்லை. அரசுக்கு இதை உணர்த்தவே நாங்கள் பரிசு அறிவித்திருக்கிறோம்.

லஞ்ச வி.ஏ.ஓ. சுப்பிரமணியனைப் பிடித்துக்கொடுத்த ஜெயராஜுக்கும் பரிசு கொடுத்தோம். அவரோ, ‘பரிசுக்காக நான் பிடித்துக்கொடுக்கவில்லை. கடமையைச் செய்ய காசு கேட்கும் ஊழல்வாதிகளை தண்டிக்க வேண்டும். அவர்கள் செய்யும் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சுப்பிரமணியனை பிடித்துக் கொடுத்தேன்’ என்றார்.

இன்னும் ஒன்பது லட்சம் பாக்கி இருக்கிறது. இதுமட்டுமல்ல, நேர்மை மிக்க நடுநிலையாளர்களிடம் பத்து கோடி நிதி திரட்டி அதை வங்கியில் டெபாசிட் செய்து, அதிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து, லஞ்சம் வாங்குபவர்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம் என்றார் நந்தகோபால்.

ஊழலுக்கு எதிரான குரல்கள் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x