Published : 06 Apr 2016 07:46 AM
Last Updated : 06 Apr 2016 07:46 AM

விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம்

பரபரப்பான சூழலில் இன்று நடக்கிறது

*


கட்சித் தலைமைக்கு எதிராக தேமுதிக நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ள பரபரப்பான சூழலில், தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கவுள்ளது.

மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த சந்திரகுமார் உட்பட 3 எம்.எல்.ஏ.க்கள், 5 மாவட்ட செயலாளர்கள் கட்சித் தலைமை மீது விமர்சனங்களை முன் வைத்தனர். மக்கள் நலக்கூட்டணியில் இணைவது தற்கொலைக்கு சமம். விஜயகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிருப்தி நிர்வாகிகள் கூறினர்.

இதன் காரணத்தால் சந்திரகுமார் உட்பட 10 நிர்வாகிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கினார். இத்தகைய பரபரப்பான சூழலில், தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் இன்று காலை நடக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சிலர் கட்சித் தலைமை மீது பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், மேலும் சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கக் கூடும் என்ற தகவல் விஜயகாந்துக்கு சென்றதன் அடிப்படையில், இன்றைய அவசரக்கூட்டத்தை அவர் கூட்டியுள்ளதாக தெரிகிறது. கட்சியில் மீதமுள்ள அதிருப்தியாளர்களை இந்த கூட்டத்தின் மூலம் அடையாளம் காணவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x