Published : 10 Jan 2014 08:10 AM
Last Updated : 10 Jan 2014 08:10 AM

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் குலாம்நபி ஆசாத் திடீர் சந்திப்பு: கூட்டணியை புதுப்பிக்க முயற்சி?

திமுக தலைவர் கருணாநிதியை வியாழக்கிழமை இரவு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திடீரென சந்தித்து பேசினார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சினையை காரணம்காட்டி கூட்டணியில் இருந்து வெளியேறியது.

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் பேசிய கருணாநிதி, ‘2ஜி வழக்கில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசாவையும், கனிமொழியையும் வேண்டுமென்றே சிக்க வைத்த நன்றி கெட்ட காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை’ என திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரதிநிதியுமான குலாம்நபி ஆசாத் வியாழக்கிழமை இரவு திமுக தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் சந்தித்தார். குலாம்நபி ஆசாத்துடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலுவும் வந்திருந்தார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.

குலாம்நபி ஆசாத் பேட்டி

கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த குலாம்நபி ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: திமுக தலைவர் கருணா நிதியை திடீரென சந்தித்து இருக்கிறீர்களே?

பதில்: நான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை நிகழ்ச்சிக்காக தமிழகம் வந்து இருக்கிறேன். எப்போதெல்லாம் சென்னைக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவேன்.

கேள்வி: திமுகவுடனான கூட் டணி குறித்து பேசினீர்களா?

பதில்: கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் ஆலோசிக்கவில்லை. இரு கட்சிகளும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்தோம். இரு கட்சித் தலைவர்களும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்போம். இதுவரை நாங்கள் சண்டை போட்டுக் கொண்டதில்லை.

கேள்வி: காங்கிரஸுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று திமுக பொதுக் குழுவில் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

பதில்: தற்போது தேர்தல் தொடர்பாக எதுவும் பேச முடியாது. தேர்தல் வரும்போது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x