Published : 29 Jun 2017 07:44 PM
Last Updated : 29 Jun 2017 07:44 PM

ஜிஎஸ்டி வரியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின்

எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழு பொறுப்பேற்று, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஒரே நாடு ஒரே வரி என்று வம்படியாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய அரசு கொண்டு வருவது ஒருபுறமிருக்க, அதை விட வேகமாக அதிமுக அரசு இந்த சட்டத்திற்கு சட்டமன்ற ஒப்புதலைப் பெற்று, வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.

வணிகர்களையும், மக்களையும் குறிப்பாக நுகர்வோரையும் பெரிதும் பாதிக்கப்படும் என்று கற்றறிந்த அனைவரும் அச்சம் தெரிவிக்கின்ற ஒரு சட்டத்தை எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமலேயே அதிமுக அரசு அமல்படுத்த துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

வரி செலுத்தாமல் இருந்த ஜவுளித் தொழிலுக்கு 5 சதவீத வரி, ஹோட்டல் தொழிலுக்கு கடுமையான வரி உயர்வு என்பது ஒரு பக்கம் பாதிப்பு என்றால், இன்னொரு பக்கம் சிறு குறு வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஜவுளித் தொழிலுக்கு விதிக்கப்பட்ட வரியை கண்டித்து இன்றும் கூட முதல்வரின் சொந்த மாவட்டத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மிகப்பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பட்டாசிற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சிவகாசி பட்டாசு ஆலைகள் ஜூன் 30 முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளனர். சினிமாவுக்கு ஜிஎஸ்டியிலும் வரி என்றால், தனியாக மாநில அரசும் கேளிக்கை வரி விதிக்கப் போகிறது என்று சினிமா துறையில் உள்ளவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். தமிழ் திரைப்படங்களுக்கு உள்ள வரி விலக்கு நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அந்த குறைகளுக்கு தீர்வு காண மத்திய அரசிடம் முறையிடவும் இல்லை. பிஸ்கட்டுக்கு அதிகவரி, தங்க பிஸ்கட்டுக்கு குறைந்த வரி என்றும், இது வரை வரி செலுத்தாமல் தங்களுக்கான உபகரணங்களை வாங்கி வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கூட மனிதாபிமானமே இன்றி வரி விதிப்பதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குரிய இலக்கணம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது.

பல்வேறு தரப்பினரும், பொருளாதார வல்லுனர்களும் அச்சம் தெரிவிக்கும் இந்த சட்டத்தை அவசரமாக செயல்படுத்தும் முடிவை செப்டம்பர் மாதம் வரையாவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையையும், தமிழக சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றும் முன்பு அதை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி ஆராய வேண்டும் என்று அதிமுக அரசுக்கு வைத்த கோரிக்கையையும் நிராகரித்து, அவசர கதியில் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் வரலாறு காணாத முறையில் கண்களை கூச வைக்கும் விளம்பர வெளிச்சத்தில் நடைமுறைக்கு வருகிறது.

இந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்ட மசோதாவை முதன்முதலில் மத்திய அரசு கொண்டு வந்த போது அதிமுக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்திய நிதியமைச்சருக்கு 10.9.2014 அன்று ஒரு கடிதம் எழுதி கடுமையான ஆட்சேபங்களை தெரிவித்திருந்தார். அதே தினத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி தனது கருத்திற்கு ஆதரவும் திரட்டினார்.

மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், உள்ளூர் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கும் உரிமை மாநில அரசு அளிக்க வேண்டும். மாநிலங்களுக்குள், மாநிலங்களுக்கு இடையில் 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் டீலர்களை மாநில அரசின் அதிகாரத்திற்குள் விட்டுவிட வேண்டும். புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் உரிமை மாநில அரசிடமே கொடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான விற்பனை மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டியில் உள்ள 4 சதவீத சிஜிஎஸ்டியை மத்திய அரசின் இழப்பீட்டு நிதிக்கு அனுப்பாமல் மாநில அரசே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பீட்டை வழங்குவதற்கான ஏற்பாடு அரசியல் சட்ட திருத்தத்திலேயே இடம்பெற வேண்டும். அதை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசின் கொள்கை முடிவிற்கு விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

பிறகு பிரதமர் நரேந்திரமோடிக்கு 17.8.2014 மற்றும் 14.6.2016 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் வரி விவகாரங்கள் மாநில சட்டமன்றத்தின் உரிமையை பறிக்கிறது. இதை தமிழகம் ஏற்க முடியாது. மாநில அரசுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் 9270 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டி இந்த சரக்கு மற்றும் வரிச்சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

ஆனால் அதிமுக அரசு சுட்டிக்காட்டிய அந்த ஆட்சேபங்கள் எதற்கும் மத்திய அரசு தீர்வு காணவில்லை என்ற போதிலும், இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த சட்டத்தை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார். மாநில நிதியமைச்சரோ மக்களின் குறைகளை மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவதற்கு பதில் ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு தீர்வு காண்பதில் தோல்வி கண்டு விட்டார்.

மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாக முடியாது என்ற பீதியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அள்ளித் தெளித்த கோலத்தில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை செயல்படுத்துகிறது. வருமான வரித்துறை ரெய்டு, சிபிஐ விசாரணை, முதல்வர் மீதே வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு, நம்பிக்கை வாக்கெடுப்பில் நடைபெற்ற குதிரை பேரம், குட்கா மாமூல் விவகாரத்தில் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வருமான வரித்துறை எழுதியுள்ள கடிதம் என்று பல்வேறு ஊழல் வழக்குகளின் உக்கிரத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

மக்கள் நலன்களை ஈவு இரக்கமின்றி மத்திய அரசிடம் அடகு வைத்து, தங்கள் பதவி சுகத்திற்காக, மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தங்களை மத்திய அரசுக்கு அடிமைப்படுத்திக் கொள்ளும் முதல்வரின் போக்கு கவலையளிக்கிறது. ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்று முழங்கும் மத்தியில் உள்ள பாஜக அரசு இவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அதிமுக அணியினரை அன்போடு அரவணைத்துக் கொண்டு தமிழக நலன்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

ஜூலை 1-ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. பாதிக்கப்படும் வணிகர்கள் மத்தியில் எவ்வித விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள வணிக வரித்துறை அதிகாரிகள் விற்பனை வரி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி என்பது விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி ஆகிய மூன்று வரிகளையும் உள்ளடக்கியது.

ஆகவே இந்த சட்டத்தை அமல்படுத்த அவர்களுக்கும் பயற்சி அளிக்கப்படவில்லை. ஏன் வணிக வரித்துறை அதிகாரிகளை இதுவரை இப்படியொரு சட்டம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு தயார்படுத்தவில்லை. வெளி மாநில விற்பனையில் ஈடுபடும் வணிகர்களுக்கு இந்த சட்டத்தை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டுதல்கள் இல்லை. உற்பத்தி வரி செலுத்த இதுவரை இருந்த ஒன்றரைக்கோடி ரூபாய் வரம்பு இப்போது 20 லட்சமாக குறைக்கப்பட்ட நிலையில், சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை.

சேவை வரி, விற்பனை வரி, உற்பத்தி வரி போன்றவற்றில் ஏதாவது ஒன்றிற்கு விலக்குப் பெற்ற வணிகர்களுக்கு இந்த சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் எப்படி அமல்படுத்தப்படும்? அவர்களுக்கு வரி விதி விலக்கு வழிகாட்டுதல்கள் என்ன என்பதை அதிமுக அரசு அறிவிக்கவில்லை. ஆனால் ஜூலை முதல் தேதியிலிருந்து சரக்கு மற்றும் வரிச் சட்டம் அமலுக்கு வருகிறது.

ஏற்கெனவே வறட்சியில் தமிழகம் வாடிக்கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே வங்கி சேவைகளும், சிறு குறு வர்த்தக நிறுவனங்களும் இன்னும் சகஜ நிலைக்கு திரும்பி வரவில்லை.

மாநிலத்தின் நிதி நிர்வாகம் நிலை குலைந்து விட்டது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையே சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்வளவு நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அமல்படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழு பொறுப்பேற்பது மட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x