Last Updated : 01 Sep, 2016 05:05 PM

 

Published : 01 Sep 2016 05:05 PM
Last Updated : 01 Sep 2016 05:05 PM

அரியலூரில் 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணி விரைவுபடுத்தப்படுமா?

புறவழிச்சாலையில் இயக்கப்படும் பேருந்துகளால் மக்களின் அவதி தீர்வது எப்போது?

*

அரியலூரில் கடந்த 7 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்றுவரும் புதைச் சாக்கடை பணிகளுக்காக கடந்த 4 மாதங்களாக பேருந்துகள் செல்லும் சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

18 வார்டுகளைக் கொண்டுள்ள அரியலூர் நகராட்சியில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 28 ஆயிரத்து 902 பேர் வசிக்கின்றனர். நகராட்சியில் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் மற்றும் மழை நீர் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்காலில் விடப்படுவதால் பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் புதைச் சாக்கடைத் திட்டத்தை அரியலூர் நகராட்சியில் செயல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கடந்த 2009-ல் அரியலூர் நகரில் புதைச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இப்பணியை இரண்டரை ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2010-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டு, 7 ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

புதைச் சாக்கடை நீரை உறிஞ்சும் வகையில் அரியலூரில் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள வாரணவாசி கிராமத்தின் அருகில் சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்யும்வகையில் 4 ஏக்கர் பரப்பளவில் 4 மில்லியன் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து இயக்கப்படும் சாலைகளில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, மாதக்கணக்கில் கிடப்பில் உள்ளது. இதனால், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக செலவு செய்து ஆட்டோவில் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நகரின் மத்தியில் உள்ள வணிகர்கள், வியாபாரம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் என்றால், பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை போர்டுகள் வைக்காததால் வாகன ஓட்டிகள் அப்பாதையில் சென்று, பணிகள் நடைபெறுவதை அறிந்து வேறுவழியின்றி வந்த வழியே திரும்பச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

புதைச் சாக்கடை பணிகள் நடைபெறுவதால், ஏற்கெனவே இருந்த திறந்த நிலை கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் சிறிய அளவில் மழை பெய்தாலும் தெருக்களில் உள்ள சாக்கடை தண்ணீர் மற்றும் மழைநீர் சாலைகளில் தேங்குகிறது.

இதுகுறித்து நகராட்சித் தலைவர் முருகேசனிடம் கேட்டபோது, “தற்போது புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை 3 மாதத்தில் முடித்துத் தருவதாக ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ளனர். பணிகள் முடிந்ததும் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும்” என்றார்.

அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனு பாலகிருஷ்ணன் கூறியபோது, “கடந்த 4 மாதமாக நகரின் முக்கிய சாலைகளில் பணிகள் நடைபெறுவதால் நகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டத்தை விரைந்து முடித்து தெருக்கள் மற்றும் சாலைகளைச் சீரமைக்க வேண்டும்” என்றார்.

அனுமதி பெறுவதிலேயே அதிக தாமதம்

இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அரியலூர் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறியபோது, “ஒப்பந்ததாரர்களின் சுணக்கமான பணி காலதாமதத்துக்கு காரணம். மேலும், முக்கிய சாலைகளில் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், அந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டு விடுவதால், பின்னர் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் அனுமதி பெற வேண்டி, இதிலேயே அதிகம் தாமதமாகிவிட்டது. தற்போது முழுவீச்சில் பணிகள் நடைபெறுவதால் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x