Published : 18 Mar 2017 03:20 PM
Last Updated : 18 Mar 2017 03:20 PM

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரி மாற்றம்: புதிய அலுவலராக பிரவீன் நாயர் நியமனம் - திமுக புகார் அடிப்படையில் நடவடிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தி.ந.பத்மஜா தேவியை மாற்றிவிட்டு, புதிய அதிகாரியாக பிரவீன் நாயரை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநரான தி.ந.பத்மஜாதேவி நியமிக்கப்பட்டார். கடந்த 16-ம் தேதி முதல் வேட்பாளர்களிடம் இவர் வேட்புமனுக்களை பெற்று வந்தார்.

இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில், “சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய, சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் கே.ஜே.ஜார்ஜை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் செய்யப்பட்டது. ஆனால், அந்தப் புகார்கள் மீது, அப்போது தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த தி.ந.பத்மஜா தேவி நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், அதே அதிகாரி ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட் டுள்ளார். அவரையும் மாற்ற வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வடக்கு) பிரவீன் பி.நாயரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சில தினங்களுக்கு முன்பு சந்தித்து, புகார் மனு அளித்தோம். கடந்த தேர்தலின்போது எந்த நடவடிக்கையும் எடுக்காத, அதே ஊழல் அதிகாரியை மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமித்ததன் மூலம் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தோம். எங்கள் கோரிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றியுள்ளனர். இதற்காக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x