Published : 24 Sep 2016 08:28 AM
Last Updated : 24 Sep 2016 08:28 AM

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தகவல்

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பு



சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. அவரது உடல்நலத்தை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கமுதியில் அதானி நிறுவனத்தின் சூரிய மின்சக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 21-ம் தேதி தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் அவர் தலைமைச் செயலகம் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க் கப்பட்டார். இத்தகவல் இரவு 12 மணி அளவில் வெளியானது.

இதையடுத்து, அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்கள் பலரும் மருத்துவமனையில் திரண்டனர். நள்ளிரவு 1.05 மணிக்கு மருத்துவ மனையின் தலைமை இயக்க அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘காய்ச் சல், நீர்ச்சத்து குறைவு காரண மாக தமிழக முதல்வர் ஜெய லலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்து வர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’’ என தெரிவிக்கப் பட்டது.



இதற்கிடையில், மருத்துவமனை யில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அதிமுகவினர் அதிக அளவில் மருத்துவமனை பகுதியில் குவிந்தனர். போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் கே.ராஜு, தங்கமணி, வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.பெஞ்சமின், பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மூத்த நிர்வாகிகள் பொன்னையன், பண்ருட்டி ராமச் சந்திரன் மற்றும் ஆர்.வைத்தி லிங்கம், வேணுகோபால், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், நடராஜ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் இருந்தனர். ஒருசில அமைச்சர்கள் தவிர வேறு யாரும் முதல்வரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே மருத் துவமனையில் காத்திருந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர் அரசுத் துறை செயலர்களும் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் நலன் குறித்து விசாரித்துச் சென்றனர்.

டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ், கூடுதல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், தர், சங்கர் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, போலீஸாருக்கு உரிய உத்தரவுகள் பிறப்பித்தனர். இதற்கிடையில், புதுச்சேரி மற்றும் வெளி மாவட் டங்களில் இருந்தும் அதிமுக வினர் ஏராளமான வாகனங்களில் சென்னையில் குவிந்தனர். ஆனா லும், ஒருசிலர் மட்டுமே மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் மருத்துவ மனைக்கு வெளியிலும், கிரீம்ஸ் சாலையிலும் நின்றிருந்தனர். நேரம் ஆக ஆக தொண்டர்கள், மக்கள் கூட்டம் அதிகமானதால், மருத்துவ மனை அமைந்துள்ள கிரீம்ஸ் சாலை, காதர் நவாஸ்கான் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதனால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேனாம்பேட்டை சந்திப் பில் இருந்து வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டதால் அங்கும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மருத்துவமனையில் முதல்வர் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்து கோயில்களில் அதிமுக வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

காய்ச்சல் இல்லை

இந்நிலையில், முதல்வரின் உடல்நலம் தொடர்பாக மருத்துவ மனை சார்பில் பகல் 12.30 மணிக்கு அடுத்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்’’ என கூறப்பட்டது. முதல்வர் நலமாக இருப்பதை அறிந்த கட்சியினர், ஆங்காங்கே திருஷ்டி பூசணிக்காய் உடைத்தனர். முதல்வர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x