Published : 13 Feb 2017 07:45 AM
Last Updated : 13 Feb 2017 07:45 AM

முன்விரோதத்தால் நடந்த கொடூரம்: தி.மலை அதிமுக பிரமுகர் கொலை - 3 பேர் போலீஸில் சரண்

ரியல் எஸ்டேட் தொழிலில் 3.5 கோடி ரூபாயை ஏமாற்றியதாக திருவண்ணாமலை நகர அதிமுக முன்னாள் செயலாளர் கனகராஜ் கொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை கார்கானா தெருவில் வசித்தவர் கனகராஜ்(55). தி.மலை நகர அதிமுக முன்னாள் செயலாளர். இவர், தனது நண்பர் கண்ணதாசனுடன், செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பேட்மிண்டன் விளையாட இரு சக்கர வாகனத்தில் நேற்று காலை சென்றார். இரு சக்கர வாகனத்தை கண்ணதாசன் ஓட்டிச் சென்றார். அண்ணாமலையார் கோயில் திருமஞ்சன கோபுரம் எதிரே (நகர காவல்நிலையம் அருகே) சென்றபோது, கனகராஜை வழிமறித்து 3 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

அவரது இறப்பை உறுதி செய்த பிறகு, நகர காவல் நிலையத்தில் கொலையாளிகள் 3 பேரும் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து கனகராஜ் அண்ணன் சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, “ரியல் எஸ்டெட் மற்றும் கந்து வட்டி தொழிலில் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். அவருடன், திருவண்ணாமலை காந்தி நகரில் வசிக்கும் பங்க் பாபு(44) என்பவர் தொழில் செய்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாபு பிரிந்துள்ளார். பின்னர் அவர், திமுகவில் இணைந்து மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக இருந்துவந்தார்.

தி.மலை காந்தி நகரில் உள்ள 4,500 சதுரடி கட்டிடத்தை வாங்குவதற்காக, கனகராஜிடம் ரூ. 3.5 கோடியை பாபு கொடுத்துள்ளார். ஆனால், இடத்தை கிரயம் செய்துகொடுக்காமலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் கனகராஜ் ஏமாற்றி உள்ளார்.

இதற்கிடையில், பாபுவை கனகராஜின் ஆட்கள் சமீபத்தில் தாக்கி உள்ளனர். இதனால், இருவருக்கும் இடையே மோதல் முற்றியது. கனகராஜை தீர்த்துக்கட்ட பாபு முடிவு செய்துள்ளார். அதற்காக, தி.மலை பழைய கார்கானா தெருவில் வசிக்கும் கூட்டாளிகள் ராஜா(31) மற்றும் சரவணன்(27) ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அதில் கனகராஜை இன்று (நேற்று) காலை பின்தொடர்ந்த சரவணன், திருமஞ்சன கோபுரம் எதிரே உள்ள வேகத்தடை முன்பு, கனகராஜ் சென்ற வாகனத்தின் மீது இரு சக்கர வாகனத்தால் மோதி உள்ளார். இதில் நிலைதடுமாறிய கனகராஜ் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

அப்போது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு பின்னால் மறைந்திருந்த பாபு மற்றும் ராஜா ஆகியோர் ஓடி வந்து இருவரையும் வெட்டினர். உயிருக்கு பயந்து, வெட்டுக் காயங்களுடன் கண்ணதாசன் ஓடிவிட்டார். பின்னர், கனகராஜை வெட்டிக் கொலை செய்தனர். அவரது இறப்பை உறுதி செய்த பிறகு, இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் வந்து நகர காவல் நிலையத்தில் சரணடைந்தனர்” என்றனர். அவர்களிடம் இருந்து 2 கத்தி, கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x