Published : 09 Jan 2014 10:10 AM
Last Updated : 09 Jan 2014 10:10 AM

கடல் தாமரை போராட்டத்துக்காக ஆதரவு திரட்டும் பாஜக - பாம்பனில் 50 ஆயிரம் மீனவர்களை குவிக்கத் திட்டம்

மீனவர்கள் பிரச்சினைக்காக பாஜக மீனவர் அணி சார்பில் ஜனவரி 31ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள கடல் தாமரை போராட்டத்துக்கு 50 ஆயிரம் பேரை திரட்ட ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுக் கக் கோரியும் மீனவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஜனவரி 31ம் தேதி பாஜக மீனவர் அணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

650 மீனவ கிராமங்களில் ஆதரவு பிரச்சாரம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ‘கடல் தாமரைப் போராட்டம்’என பெயர் வைத் திருக்கிறார்கள். இதில் அதிக அளவில் மீனவர்களை கலந்துகொள்ள வைப்பதற்காக மீனவர் அணியைச் சேர்ந்த 100 முக்கிய பொறுப்பாளர்கள் மீனவ கிராமங்களில் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் உள்ள 650 மீனவர் கிராமங்களில் இந்த அணியினர் மீனவர்களை திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

இதுகுறித்து `தி இந்து’வுக்கு பாஜக மீனவர் அணி மாநிலத் தலைவர் சதீஷ்குமார் கூறியதாவது:

தமிழக மீனவர்களைப் போலவே பஞ்சாப் மீனவர்களும் பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர் களை, பாகிஸ்தான் கடற்படையினர் கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கவைத்து மரியாதை யோடு நடத்துகிறார்கள். அதற்கு காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அணுகுமுறைதான். ‘மோடி பிரதமராக வந்தால் மட்டுமே எங்களுக்கு விடிவு பிறக்கும்’ என்று நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மீனவ மக்கள் சொல்கிறார்கள் என்றார்.

அடுத்த சந்ததியையும் சிந்திப்போம்

“தேர்தல் நேரத்தில் இந்தப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் மீனவ மக்களின் வாக்கு வங்கியை குறிவைக்கிறதா பாஜக?’’ என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான ராமேஸ்வரம் முரளிதரனைக் கேட்டபோது, “’மற்றவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள்.

ஆனால், பாஜக அடுத்த சந்ததியினரைப் பற்றியும் சிந்திக்கும். 2011-ல் நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக் குமாரும், வீரபாண்டியனும் இலங்கை கடற் படையால் கொல்லப்பட்டார்கள். அப்போது அவர்களின் வீடுகளுக்கே சென்ற சுஷ்மா ஸ்வராஜ், வீரபாண்டியனின் தங்கை ரேவதிக்கும், ஜெயக்குமாரின் மகளுக்கும் தலா 2 லட்சத்தை தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுத்தார்.

மத்தியில் பாஜக அரசு இருந்தபோது மீனவர்களின் நலனுக்காக `நவரத்தின மாலா’ திட்டத்தை கொண்டுவர தீர்மானித்தது. ஆனால், அதற்குள்ளாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அந்தத் திட்டத்தை காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும், மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கத்தான் சுஷ்மா இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்” என்று சொன்னார் முரளிதரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x