Published : 21 Apr 2014 09:20 AM
Last Updated : 21 Apr 2014 09:20 AM

4 குடிசை பகுதிகளை தத்தெடுத்தது சென்னை பல்கலைக்கழகம்: ரூ.35 கோடியில் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, சுகாதாரம்

லாக் நகர், அயோத்தியா குப்பம் உள்ளிட்ட 4 குடிசைப் பகுதி களை சென்னை பல்கலைக் கழகம் தத்தெடுக்கிறது என துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் (ஆர்ஒய்ஏ) மெட்ராஸ் மெட்ரோ அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில் ஆர்ஒய்ஏ மெட்ராஸ் மெட்ரோ அறக்கட்டளை 21-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை அடையாறு அவ்வை இல்லம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அறக்கட்டளையின் தலைவர் பிரகாஷ் நாகர் தலைமை தாங்கினார். திட்டத் தலைவர் அஜித் கோதி, செயலாளர் தேவேந்திர மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் ஆதரவற்றோர் பள்ளிகளில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த நகைச்சுவை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெற்றி நிச்சயம்

விழாவில், துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேசியதாவது:

உங்களுக்கு தன்னம்பிக்கை யுடன், விடாமுயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்க்கை யில் சாதனை படைக்கலாம். நிச்சயம் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, இந்த சமுதாயத்திற்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். பள்ளிப் பருவத்தில் உணவு இல்லாமலும், கல்லூரியில் ரூ.80 கட்டணம் கட்ட முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், தன்னம்பிக்கையை மட்டும் விடவில்லை. இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறேன். இதற்கு என்னுடைய தன்னம் பிக்கையும், விடாமுயற்சியும், உழைப்பும்தான் முக்கியமான காரணமாகும் என்றார்.

குடிசை பகுதிகள் தத்தெடுப்பு

அதன்பின், துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னைப் பல்கலைக்கழகம் சென்னையில் உள்ள லாக் நகர், அயோத்தியா குப்பம் உள்ளிட்ட 4 குடிசைப் பகுதிகளை தத்தெடுக்க இருக்கிறது. முதல் கட்டமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பின்புறம் அமைந்துள்ள லாக் நகரை தத்தெடுத்துவிட்டோம். இந்த 4 குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை கிடைக்கச் செய்யவிருக்கிறோம். அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.5 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் ரூ.30 கோடியை தமிழக அரசிடம் கேட்டு இருக்கிறோம். இதே போல தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களும் தங்களால் இயன்ற அளவில் குடிசைப் பகுதிகளை தத்தெடுக்க உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x