Published : 11 Jan 2017 03:54 PM
Last Updated : 11 Jan 2017 03:54 PM

டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிரிழப்புக்கு பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விவசாயிகள் தற்கொலை களை தடுத்து நிறுத்தக் கோரி கும்ப கோணம் காந்தி பூங்கா அருகில் தமிழ்நாடு உழவர் பேரியக் கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமை வகித்தார். இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. இந்த அதிர்ச்சியில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கு உள்ள விவசாயிகள் சங்கத்தினர் பெயரள வுக்குத்தான் போராடுகின்றனர். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். இந்த பிரச்சினைக்கெல்லாம் அதிமுக அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரை முதல்வர் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று பிரதமர் இல்லம் முன் முற்றுகையிட வேண்டும் என்றார்.

போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “விவசாயிக ளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், விவசாயத் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரமும், மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

இதில், பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறும்போது, “வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும். பயிர்கள் கருகுவதைக் கண்டு அதிர்ச்சியில் இறந்த விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து விவசாயிகள் அமைப்பும் ஒன்றிணைந்து உரிமைக்காக போராட முன்வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x