Published : 30 Jun 2016 08:49 AM
Last Updated : 30 Jun 2016 08:49 AM

தீபாவளி முன்பதிவு தொடங்கியது: தென் மாவட்ட விரைவு ரயில்களுக்கான டிக்கெட் ஐந்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன - கவுன்ட்டர்களில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ஐந்தே நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு ரயில் களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந் தன. இதனால், கவுன்ட்டர்களில் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இந்த ஆண்டு தீபாவளி பண் டிகை அக்டோபர் 29-ம் தேதி வருகிறது. இந்த பண் டிகையையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. லட்சக் கணக்கானோர் ரயில் மற்றும் பஸ்கள் மூலம் செல்வார்கள். மக்களின் வசதிக்காக அரசு போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். நீண்ட தூரத்துக்கு சொகுசான பயணம், குறைவான கட்டணமே இதற்கு காரணம்.

5 நிமிடங்கள்

ரயில்களுக்கு 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய் யும் முறை கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. தீபாவளி அக்டோபர் 29-ம் தேதி வருவதால், 2 நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 27-ம் தேதி சொந்த ஊருக்கு புறப்பட திட்டமிட்டு இருந்தவர்கள் நேற்று காலை 8 மணி முதல் முன்பதிவு செய்தனர்.

சென்னை சென்ட்ரல், எழும் பூர், மாம்பலம், தாம்பரம், பெரம் பூர் போன்ற பல்வேறு ரயில் நிலையங்களின் கவுன்ட்டர்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற் காக நேற்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங் கிய ஐந்தே நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

காத்திருப்பு பட்டியல்

கன்னியாகுமரி, கம்பன், ராமேஸ்வரம், தஞ்சாவூர், அனந்த புரி, நாகர்கோவில் போன்ற மற்ற விரைவு ரயில்களிலும் 20 நிமிடங் களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. பெரும்பாலான விரைவு ரயில்களில் காத்திருப் போர் பட்டியல் சராசரியாக 150-ஐ தொட்டது. அதிகபட்சமாக பாண்டி யன் விரைவு ரயிலில் காத்திருப் போர் பட்டியல் 401 ஆக இருந் தது. விரைவு ரயில்களில் 2 ஏசி, 3 ஏசி பெட்டிகளிலும் 60 சதவீத டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. திருச் செந்தூர், கன்னியாகுமரி விரைவு ரயில்களில் ஏசி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியல் 10 முதல் 20 வரையில் இருந்தது. இத னால், டிக்கெட் முன்பதிவு கவுன்ட் டர்களில் காத்திருந்த நூற்றுக் கணக்கானோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

சிறப்பு ரயில்கள் எப்போது?

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இணையதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றபடி தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையைக் கொண் டாட அக்டோபர் 27-ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்கள் நேற்று காலை முதலே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன.

அடுத்த, சில வாரங்களில் காத்திருப்பு பட்டியல் அதிகமாக உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு போன்றவை குறித்து அறிவிப்போம். கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி எழும்பூரில் இருந்து மொத்தம் 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டும் இதே அளவுக்கு அல்லது கூடுதலான ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்

தற்போது, பெரும்பாலான டிக்கெட்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வேகம், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு நிமிடத்துக்கு 2,000 டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x