Published : 01 May 2017 10:49 AM
Last Updated : 01 May 2017 10:49 AM

குடிநீர் தொழிற்சாலைகளை மூடக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வாணியம்பாடி அருகே குடிநீர் தொழிற்சாலைகளை மூடக் கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொல்லப்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் 3 தனியார் குடிநீர் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தினர்.

குடிநீர் தொழிற்சாலைக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், வழக்கம்போல் நேற்று குடிநீர் தொழிற்சாலை இயங்கத் தொடங்கியது. ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வேன்கள் மூலம் தண்ணீர் லோடு வெளியூர்களுக்கு நேற்று விநியோகம் செய்யப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது, குடிநீர் தொழிற்சாலையில் இருந்து தண்ணீர் கேன்களுடன் வெளியே வந்த வேனை பொதுமக்கள் சிறைபிடித்து, தண்ணீர் கேன்களை எடுத்து கீழே வீசினர்.

அப்போது, போராட்டத்தைக் கைவிடாவிட்டால் வேனை ஏற்றிக் கொலை செய்வேன் என வேன் ஓட்டுநர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் வேன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத வேன் ஓட்டுநர் கீழே இறங்கி தப்பியோடினார்.

இதையடுத்து, பொதுமக்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, கொலை மிரட்டல் விடுத்த வேன் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது,‘‘கொல்லப்பள்ளி கிராமத்தில் தனியார் குடிநீர் தொழிற்சாலைகள் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, ஆயிரம் அடிக்கு கீழே உள்ள தண்ணீர் உறிஞ்சுகின்றனர். இதனால், விவசாயம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார்ந்த தொழில்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

குடிக்கவும், வீட்டு உபயோகத்துக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். எங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் இல்லை. இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த சூழ்நிலையிலும், தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை தனியார் குடிநீர் தொழிற்சாலைகள் கேன்களின் விற்பனை செய்து வருகின்றன. எனவே, 3 குடிநீர் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்’’ என்றனர்.

பின்னர், பொதுமக்கள் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x