Published : 16 Oct 2014 07:51 PM
Last Updated : 16 Oct 2014 07:51 PM

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பு: வைகோ மகிழ்ச்சி

"விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

மேலும், "இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து லக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப் வாதாடினார். லக்சம்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம் தங்கள் தாயகத்தின் விடுதலைக்காகவும் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் போராடியதேயொழிய அது பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும், விக்கிப்பீடியா தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிப்பது என்பது நியாயமற்றது என்றும் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தியா உள்ளிட்ட உலகின் 40-க்கும் மேற்பட்ட நாடுகள், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணைபோனதும், நிதி மற்றும் ராணுவ உதவிகளை வாரி வழங்கியது சர்வதேச சட்ட நியதிகளுக்கும், உலக நீதிக்கும் எதிரானது ஆகும்.

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் மாவட்ட நீதிமன்றம் 2011 அக்டோபர் 21-ல் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்ரவாத இயக்கம் அல்ல என்று தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு 2011 ஜூன் 23 இல் நேபிள்ஸ் நீதிமன்றம் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது.

சர்வதேச சட்டங்களின்படி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய புலிகள் இயக்கத்தை, தீவிரவாத இயக்கமாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் 2009-ல் தெளிவுபடுத்தியது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிதான், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் ரிட் மனு தாக்கல் செய்தேன். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

இந்தச் சூழ்நிலையில், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி உலக நாடுகளும் இதனைப் பின்பற்றி தடையை நீக்கும் என்பது உறுதி.

இந்தியாவும் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கமாக அங்கீகரித்து, அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x