Published : 16 Feb 2014 05:49 PM
Last Updated : 16 Feb 2014 05:49 PM

அரிசிக்கு சேவை வரி விதிப்பது மத்திய அரசின் ஓரவஞ்சனை: வைகோ குற்றச்சாட்டு

வட மாநிலங்களில் விளையும் கோதுமையைத் தவிர்த்துவிட்டு, அரிசிக்கு சேவை வரி விதிப்பது மத்திய அரசின் ஓரவஞ்சனை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து, மக்கள் தாங்கமுடியாத சுமைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விலை ஏற்றத்துக்குக் காரணமான இணையதள வணிகம் மற்றும் சேவை வரி விதிப்பை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு அலட்சியப்படுத்தியது.

1994 இல் நிதி அமைச்சகச் சட்டத்தின் மூலம் காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்திய சேவை வரிவிதிப்பு முறை இன்று பூதாகர வடிவம் எடுத்துவிட்டது. 1994 இல் சேவை வரிவிதிப்பின் கீழ் மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தன. தற்போது 120 பொருட்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. 1994 இல் வெறும் 410 கோடி ரூபாயாக இருந்த சேவை வரி, 2012-2013 நிதி ஆண்டில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாட்டு மக்களுக்குச் செய்த அரிய சேவை, 'சேவை வரி' மூலம் மக்களை வாட்டி வதைத்ததுதான்.

2012 நிதிநிலை அறிக்கையில், மேலும் சில பொருட்களுக்குச் சேவை வரி விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவித்ததுடன், சேவை வரியையே முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

தற்போது மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் அந்திமக்காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்ற வேளையில், மேலும் ஒரு பேரிடியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது மத்திய நிதி அமைச்சர் இறக்கி இருக்கிறார்.

விவசாய விளை பொருளான அரிசிக்கு, இதுவரை சேவை வரியில் இருந்து விலக்கு தரப்பட்டு இருந்தது. நெல், அரிசியாக்கப்பட்டுச் சேமிக்கப்படுவதாலும், சந்தைப் பண்டமாக மாற்றப்படுவதாலும் இந்த வரி விதிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது. 2012 ஜூலை முதல் இந்த வரியை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், வட மாநிலங்களில் விளையும் கோதுமைக்குச் சேவை வரி கிடையாது. எனவே இது தமிழ்நாட்டுக்குச் செய்யப்படும் ஓரவஞ்சனை என்பது வெள்ளிடைமலை. மத்திய அரசின் இத்தகைய வஞ்சகப் போக்கை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டின் அரிசித் தேவை ஒரு ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் ஆகும். இதில் சரிபாதி அளவு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்துதான் வருகிறது. 12.36 விழுக்காடு சேவை வரி விதிக்கப்படுமானால், வெளிமாநில அரிசி விலை உயரும். இதனால், சந்தையில் மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே மத்திய அரசு அரிசிக்கு விதிக்கின்ற சேவை வரியை இரத்து செய்வது மட்டும் அன்றி, குறைந்தபட்ச அத்தியாவசியப் பண்டங்களுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x