Published : 25 May 2017 12:28 PM
Last Updated : 25 May 2017 12:28 PM

ரூ.4 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய வருவாய் வட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

4 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய வருவாய் வட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், வருவாய் துறையின் பணிகளை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் தேவைகள், மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நிலப் பரப்பளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வசதிக்காக பெரிய வட்டங்களைப் பிரித்து புதிய வட்டங்களை உருவாக்குதல், வருவாய்த் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தினைப் பிரித்து 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கம்புணரி வட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 23-ம் தேதி காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

இப்புதிய சிங்கம்புணரி வட்டத்தை தோற்றுவிப்பதன் மூலமாக, பொதுமக்கள் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை மாறி சிங்கம்புணரியிலேயே தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அரசு நல உதவித் திட்டங்களை பெற்றுக் கொள்ள இயலும்.

மேலும், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தை பிரித்து 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 51 கிராமங்களில் வசிக்கும் சுமார் 1,10,000 பொதுமக்கள் பயனடையும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தையும், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தை பிரித்து 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 கிராமங்களில் வசிக்கும் சுமார் 1,50,000 பொதுமக்கள் பயனடையும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆண்டிமடம் வட்டத்தையும் துவக்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி, குடவாசல் மற்றும் திருவாரூர் ஆகிய வட்டங்களை சீரமைத்து 55 கிராமங்களில் வசிக்கும் சுமார் 1,20,000 பொதுமக்கள் பயனடையும் வகையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூத்தாநல்லூர் வட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டங்களை சீரமைத்து 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 55 கிராமங்களில் வசிக்கும் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் பயனடையும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கயத்தாறு வட்டம் என மொத்தம் 4 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய வருவாய் வட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x