Published : 17 Jan 2014 12:00 AM
Last Updated : 17 Jan 2014 12:00 AM

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இரவு நேர பஸ் பயணம்: சென்னையில் இரவு நேர மகளிர் பஸ்கள் இயக்கப்படுமா?

சென்னை மாநகரில் இரவு நேரத்தில் பணி முடிந்து, வீடு திரும்பும் அனுபவம் பெண்களுக்கு இனிதாக அமைவதில்லை. இரவு நேரத்தில் அதிக பஸ்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நேரம் என்கிற பொதுவான நிலை சென்னையில் மாறி விட்டது. சுழற்சி முறையிலான அலுவலக வேலை நேரங்கள் அதிகரித்துள்ளன. தனியார் அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள் இரவு நேரத்தில் பணி முடித்து வீடுகளுக்கு செல்வதற்கு பேருந்துக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பஸ் நிறுத்தங்களில் போதிய வெளிச்சம் இல்லாதது, பாதுகாப்பின்மை பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.

பள்ளிக்கூடம், கோவில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள் அருகில் என விதிமுறைகளை மீறி, டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு அதிகாரிகள் திறந்துள்ளனர்.

பெண்கள் கருத்து

இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டு வீடு திரும்பும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சங்கீதா (24) கூறியது:

` நான் பணியாற்றும் அலுவலகம் பாரிமுனையில் இருக்கிறது. பணி முடிய தினமும் இரவு 8 மணிக்கு மேல் ஆகிறது. அதற்கு பிறகு வந்து பேருந்துக்காக காத்துக் கொண்டு இருக்கும்போது மது அருந்தி விட்டு வரும் நபர்களால் பெரிய பிரச்சினையாக உள்ளது,” என்றார்.

“இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக பெரிய நிறுவனங்கள் பஸ் ஏற்பாடு செய்கின்றன. ஆனால் நகரில் சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள்தான் அதிகமாக உள்ளன. அவற்றால் பஸ்ஸை ஏற்பாடு செய்ய முடிவதில்லை. மாநகர இரவு பஸ்களுக்காக காத்திருந்தால் மணிக்கணக்கில் தாமதமாகிறது. இதனால் பெண்களாக இருந்தாலும் பணி முடித்து வீடுகளுக்கு செல்ல நெடு நேரம் ஆகிறது என்கிறார் ஐ.டி. நிறுவன ஊழியர் மகாலட்சுமி (32).

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஒ.பி.சுகந்தி கூறுகையில்:- பெண்களுடைய பாதுகாப்பை கருதி பஸ்களில் கண்காணிப்பு கேமராக்களை அரசு பொருத்த வேண்டும். மக்கள் நெருக்கடி இருக்கும் இடங்களில் குறிப்பாக பஸ் நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும். மது அருந்திவிட்டு பஸ்ஸில் வரும் நபர்கள் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றை தடுக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து உயர் அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம்.அவர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை.

பணி இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் என்பது வேலைச் சூழலுக்கு மட்டும் பொருந்தக் கூடியது அல்ல. வேலைக்கு சென்று வர பயணம் செய்யும் நேரங்களிலும் அவர்களுக்கான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இரவு நேரங்களில் இயக்கப்படும் மாநகர பஸ்கள் விஷயத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. மகளிர் பஸ் என்பது குறிப்பிட்ட பள்ளி, கல்லூரி நேரங்களுக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி இரவு நேரங்களிலும் மகளிர் பஸ் இயக்க வேண்டும். அரசு சமீபத்தில் தொடங்கிய சிறிய பஸ்களை கூட இரவு நேர மகளிர் பஸ்களாக இயக்கலாம் என்கின்றனர் சமுக ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x