Published : 17 Oct 2014 10:01 AM
Last Updated : 17 Oct 2014 10:01 AM

விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 1998 மற்றும் 2000-ம் ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் விருப்ப ஓய்வுபெற்ற போக்குவரத் துத் துறை ஊழியர்களுக்கு ஓய் வூதியம் பெறுவதற்கான உரிமை உண்டு என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர் களில், குறைந்தபட்சம் 15 ஆண்டு கள் பணி அனுபவத்துடன் 50 வயதை கடந்தவர்கள் அல்லது தொடர்ச்சி யான 20 ஆண்டுகள் பணி அனு பவம் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டனர். இந்த திட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு போக்குவரத்து கழகங்களில் பணி யாற்றிய ஏராளமான ஊழியர்கள் கடந்த 1.9.1998-க்கும் 15.12.2000-க் கும் இடைப்பட்ட காலத்தில் விருப்ப ஓய்வு பெற்றனர்.

அதன்பிறகு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 1.9.1998 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தின்படி ஏற்கெனவே விருப்ப ஓய்வு பெற்றவர்களில் 20 ஆண்டுகள் பணியை முடித்து 50 வயதை கடந்தவர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் சார்பிலும், எஸ்.சிங்காரவேலு என்ற ஓய்வுபெற்ற ஊழியர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் உரிமை உண்டு என்று கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாநில போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் ஓய் வூதிய அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தும் கடந்த 15-ம் தேதி தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

இந்த மேல்முறையீட்டு மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள், ஏற்கெனவே எழுப்பப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதே உயர் நீதிமன்றத்திலும் இதேபோன்ற வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் ஓய்வூதிய அறக்கட்டளை அதேபோன்ற பிரச்சினையை மீண்டும் எழுப்பியுள்ளது. ஆகவே, மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதுடன், வழக்கின் மனுதாரரான சிங்காரவேலுக்கு ஓய்வூதிய அறக்கட்டளை சார்பில் வழக்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும், விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை கணக்கிட்டு, எட்டு வாரங்களுக்குள் ஊழியர்களுக்கான தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ஊழியர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.அஜய் கோஷ் மற்றும் எஸ்.டி.வரதராஜுலு ஆகியோர் வாதிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x