Published : 25 May 2017 09:32 AM
Last Updated : 25 May 2017 09:32 AM

புதுச்சேரியில் பொதுமக்கள் ஆவேசம்: 9 மதுக் கடைகள் சூறை; 3 பார்களுக்கு தீவைப்பு- தடியடி நடத்திய போலீஸார் மீதும் தாக்குதல்

புதுச்சேரி எல்லைப் பகுதியில் மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் 9 மதுக் கடைகளை அடித்து நொறுக்கி, 3 பார்களுக்கும் தீ வைத்தனர். போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்திய போலீஸாரையும் ஆவேசமாக தாக்கினர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புதுச்சேரியில் 164 மதுக் கடைகள் மூடப்பட்டன. புதுச் சேரியில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் 9 மதுக் கடைகள் மற்றும் ஒரு சாராயக் கடை உள்ளன. புதுச்சேரியில் மது விலை மலிவு என்பதால், அருகில் உள்ள தமிழகப் பகுதியில் இருந்து அதிகமானோர் இந்த மதுக் கடைகளுக்கு வருகின்றனர்.

மது போதையில் இருப்பவர் களின் தொல்லை அதிகரித்து வருவதால், மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரி களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற் கிடையில் இப்பகுதியில் புதிதாக மேலும் 5 மதுக் கடைகளைத் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மதுக் கடைகளை மூடக் கோரியும், புதிய கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சோரியாங்குப்பம் - சாவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் இருந்த 9 மதுக் கடைகளும் உடனே மூடப்பட்டன.

சாராயக் கடை சூறை

இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அங்கு இருந்த சாராயக் கடைக்குள் புகுந்து சாராய பாட்டில்கள், கேன்களை அடித்து உடைத்து சூறையாடினர். உடனே போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பெண்கள் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் அறிவுச் செல்வனை பெண் ஒருவர் தாக்க, சுற்றி இருந்தவர்களும் சூழ்ந்து தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார். உடனே போலீஸார் மீண்டும் தடியடி நடத்தினர்.

இதனால் ஆவேசமடைந்த 200-க் கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்த 9 மதுக் கடைகளின் பெயர்ப் பலகைகள், அலங்கார விளக்குகள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். மதுக் கடை களையொட்டி இருந்த 3 பார்களை சிலர் தீ வைத்து கொளுத்தினர். இதில் பார்களின் கொட்டகைகள் எரிந்து சாம்பலாயின. பார்களுக்கு வைக்கப்பட்ட தீ அருகில் இருந்த கரும்பு தோட்டத்துக்கும் பரவியது.

உடனடியாக, கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டதாக சிலரை போலீஸார் பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் பாகூர் காவல் நிலையத்துக்கு சென்று அமர்ந்து மறியலில் ஈடுபட் டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினர். பொதுமக்களின் போராட் டத்தால் நேற்று சோரியாங்குப்பம் பகுயில் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்துக்குச் சென்ற எஸ்பி அப்துல் ரஹீம் விசாரணை நடத்தினர்.

முதல்வர் ஆலோசனை

சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சோரியாங்குப்பம் கலவரம் தொடர்பாக முதல்வர் நாராயண சாமி தலைமையில் டிஜிபி சுனில் குமார் கவுதம், சீனியர் எஸ்பி ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. பின் னர் டிஜிபி கவுதம் கூறும்போது, “சோரியாங்குப்பத்தில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மதுக் கடை களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

படங்கள்: எம்.சாம்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x