Last Updated : 15 Oct, 2014 12:59 PM

 

Published : 15 Oct 2014 12:59 PM
Last Updated : 15 Oct 2014 12:59 PM

ஜெயலலிதா ஜாமீன் வழக்கு: ஜெத்மலானிக்கு பதில் நாரிமன் ஏன்?

ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கில் ஆஜரான‌ மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி விலக்கப்பட்டு, புதிதாக மற்றொரு மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராவதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் ராம் ஜெத்மலானி திமுக எம்.பி. கனிமொழி சார்பாக ஆஜராகி வாதிட்டார். அதேபோல 2003-ம் ஆண்டு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த போது, அவருக்கு ஆதரவாக ராம் ஜெத்மலானி குரல் கொடுத்தார். ஒருவகை யில் ஜெயலலிதாவின் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதற்கு அவரும் முக்கிய காரணமாக இருந்தார்.

கடந்த காலங்களில் ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துடன் வலம் வந்த ராம் ஜெத்மலானி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவருக்காக ஆஜரானது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ராம் ஜெத்மலானி வாதிட்டபோதும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

அதேபோல ராம் ஜெத்மலானி ஆஜரானால் நமக்கு சாதகமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பு கூட பாதகமாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுவதுண்டு.

சரிசெய்வாரா நாரிமன்?

கட‌ந்த 7-ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத் தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்த நாளே அவரது வழக்கறிஞர்கள் டெல்லி சென்று, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிகுந்த மூத்த வழக்கறிஞர்களை தேடும் பணியில் இறங்கினர். ஹரிஷ் சால்வே, சுஷில் குமார், தவாண் உள்ளிட்ட சில வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டனர். இறுதிவரை மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தான் ஜெயலலிதாவுக்காக ஆஜராவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதால் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகவில்லை.

ஆனால் ஜெயலலிதா சார்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி எஸ். நாரிமன் ஆஜராகியுள்ளார். இவர் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்குகளில் கர்நாடக அரசு சார்பாக ஆஜரானவர். அப்போது தமிழக அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பல்வேறு கருத்துகளை நீதிமன்றத்தில் முன் வைத்தவர். இது தவிர ஊடகங்களிலும் ஜெயலலிதா மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கி இருக்கிறார்.

இதேபோல ஜெயலலிதா தொடுத்த வழக்கில் கைதான நிலையில் காஞ்சி ஜெயேந்திரருக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி ஜாமீன் பெற்று தந்தார். இத்தகைய முரண்பாடுகளை கொண்ட இவரை, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் ஜெயலலிதாவுக்காக ஆஜராகி இருப்பது நீதித்துறை வட்டாரத்தில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஜாமீன் பெற்றுத் தருவாரா என்ற சந்தேகம் அதிமுகவினரிடம் பரவலாக காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x