Last Updated : 15 Jun, 2016 05:44 PM

 

Published : 15 Jun 2016 05:44 PM
Last Updated : 15 Jun 2016 05:44 PM

மிஷன் மதுக்கரை மகராஜ்- யானையுடன் மேலும் இரு நண்பர்கள்: வன புகைப்படக் கலைஞர் கூறும் சுவையான தகவல்கள்

கோவையில் வனத் துறையினர் தேடி வரும் ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ ஒற்றை யானையுடன், மேலும் இரண்டு யானைகள் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை மதுக்கரை பகுதியில் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் சேதம் ஏற்படுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை பிடிக்க வனத்துறை தயார் நிலையில் உள்ளது.

‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ என பெயரிடப்பட்டுள்ள இத் திட்டத்தில், ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உதவியாக விஜய், பாரி, சுஜய் என 3 கும்கி யானைகள் நவக்கரை வனத்துறை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

மேலும், டாப்சிலிப் முகாமிலிருந்து கலீம் என்ற கும்கி யானையை அழைத்து வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஒற்றை யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைத்தனமும், நுட்பமும்

இந்நிலையில், அந்த ஒற்றை யானை, மேலும் 2 யானைகளுடன் இணைந்து சுற்றி வருவதாக, அந்த யானையை ஒரு வருடமாக பின்தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து வரும் வன புகைப்படக் கலைஞர் டி.குணசேகரன் கூறுகிறார். ‘மிஷன் மதுக்கரை மகராஜ்’ ஒற்றை யானை குறித்து அவர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

மதுக்கரை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் தப்பிய யானைதான் இது என பலரும் நினைத்திருப்பது தவறு. அந்த விபத்தில் தப்பிய யானை காட்டுக்குள் சென்றுவிட்டது. இந்த காட்டு யானை சாதாரணமாக கூட்டத்திலிருந்து பிரிந்து வந்தது. குழந்தைத்தனமான சேட்டைகளும், சாதுர்யமான நுட்பமும் கொண்டது. சுமார் 18 வயதுடைய சுறுசுறுப்பான தனி யானை. மதுக்கரை ராணுவ முகாம் அருகே அதன் வழித்தடத்துக்கு குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பை உடைக்க முயற்சித்து, வீட்டுச் சுவர்களையும் உடைக்கப் பழகிவிட்டார் இந்த ‘மகராஜ்’.

கடந்த 2 வருடமாக இந்த யானையை பார்த்துவருகிறேன். அதிலும் ஒரு வருடமாக பின்தொடர்ந்து சென்று புகைப்படங்கள் பல எடுத்துள்ளேன். அழகியலோடு இந்த ஒற்றை யானையை நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்கள் எடுத்துள்ளேன். ஒன்றரை வருடம் முன்பு வரை, மஞ்சுப்பள்ளமும், மருந்துகுடோன் பகுதிதான் இதன் வழித்தடங்கள். அப்போது தொடர்ந்து விரட்டப்பட்டதால் ஒரு வாரம் அந்த வழியே இந்த யானை வரவேயில்லை. காட்டுக்குள் சென்றுவிட்டது என்று நினைத்திருந்தபோது, ராணுவ முகாம் அருகே புதிய வழித்தடத்தை அமைத்து திடீரென வெளியேறியது. பாதுகாப்புக்காக ஒரு வாரம் கழித்து வழித்தடத்தை மாற்றும் அளவுக்கு புத்தி கூர்மையுடையது.

போனில் பேசி முடியும்வரை…

15 நாட்களுக்கு முன்பு, யானை வந்துகொண்டிருந்தபோது அதன் வழித்தடத்தில் ஒரு நபர் வண்டியை நிறுத்தி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். யானையை அவர் கவனிக்காததால் நாங்கள் கூச்சலிட்டோம். அவர் அதையும் கவனிக்கவில்லை.

ஆனால் அந்த ஒற்றையானை அவர் பேசி முடித்து நகர்ந்து செல்லும் வரை எதுவும் செய்யாமல் நின்று, பின்னர் கிளம்பிச் சென்றது.

வனத்துறை ஊழியர் ஒருவர் இறந்ததைத் தவிர, மற்றவர்கள் யாரும் இந்த யானையால் தாக்கி இறந்தார்கள் என்பது உறுதியாகவில்லை.

நான்கு புறமும் மக்கள் சூழ்ந்ததாலேயே, வேறு வழியின்றி விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி, ஒருவர் உயிரிழக்கவும் இந்த யானை காரணமாகிவிட்டது. மற்றபடி, மனிதர்களுக்கு தானாக எந்த அச்சுறுத்தலையும் இந்த யானை கொடுத்ததில்லை. தனது வழியில் குறுக்கிடுபவர்களைக் கூட அமைதியாகவே கடந்து சென்றிருக்கிறது. ஆனால் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது, உணவுக்காக வீடுகளை சேதப்படுத்தியது உண்மை.

ஒற்றை யானையுடன், 15 மற்றும் 24 வயதுகளையுடைய இரண்டு ஆண் யானைகள் தற்போது இணைந்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு 1.30 மணியளவில் மதுக்கரை ராணுவ முகாம் அருகே வனத்துக்குள் சென்றுவிட்டு, காலை 5.35-க்கு அவை வெளியே வந்தன. 6 மாதத்துக்கு முன்பு மருந்துகுடோன் அருகே ஒற்றை யானைக்கும், இந்த 2 யானைகளுக்கு மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் அவை இணைந்துள்ளன.

17 யானைகள் கூட்டமாக வந்தபோதும்கூட வனத்துறையினர் அவற்றை எளிதாக விரட்டிச் சென்றுவிட்டனர். ஆனால், இந்த ஒற்றை யானையை மட்டும் சுமார் 8 முறை வனத்துக்குள் கொண்டு செல்ல முயன்றும் தோல்வியே ஏற்பட்டிருக்கிறது. மதுக்கரை வனப் பகுதியில் எங்கு கொண்டுபோய்விட்டாலும், அங்கிருந்து வெளியே வர பல வழிகளை கண்டறிந்து வைத்துள்ளது. இவ்வாறு குணசேகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x