Published : 13 Jan 2014 10:36 AM
Last Updated : 13 Jan 2014 10:36 AM

உலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து

உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் தனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழவுத் தொழிலைப் போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டினுள்ளும் வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புது பானைக்கு மஞ்சள் தழையினைக் காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.

"மண்ணிலே முத்தெடுத்து பிறர்வாழ,வழங்கும் குணமுடையோன் விவசாயி" என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வாக்கிற்கிணங்க, பிறர்வாழ பாடுபடும் விவசாயப் பெருமக்களின் நல்வாழ்விற்கென "முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்", வேளாண் கருவிகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு மதிப்புக் கூட்டு வரி விலக்கு; சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியத்திலும், ஏனைய விவசாயிகளுக்கு 75 சதவீத மானிய விலையிலும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள்; உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் பயறு வகை, சிறுதளை, விதைப் பைகள் விநியோகம்; விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலான கொள்முதல் விலை; வறட்சி ஏற்படின் உடனடி நிவாரணம் என பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையைத் தமிழர்கள் இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியுள்ள இந்த இனிய வேளையில், அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x