Published : 18 Jun 2016 05:40 PM
Last Updated : 18 Jun 2016 05:40 PM

இந்தோனேஷியாவில் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் 44 பேரை மீட்க நடவடிக்கை தேவை: அன்புமணி

இந்தோனேஷிய கடலில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் 44 பேரையும் உடனடியாக இந்தோனேஷியாவுக்குள் அனுமதிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கைப் போரில் பாதிக்கப்பட்டு, வாழ வழி தெரியாமல் தவிக்கும் இலங்கைத் தமிழர்களில் ஒரு பிரிவினர் வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் போது படகு பழுதடைந்ததால் இந்தோனேஷிய கடலில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை காக்க வேண்டிய இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐநா அமைப்புகளும் இவ்விஷயத்தில் பொறுப்பை தட்டிக்கழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமிலும், மீதமுள்ளவர்கள் முகாம்களுக்கு வெளியிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் திபெத் அகதிகள், பர்மா அகதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் உரிமைகளில் ஒரு விழுக்காடு கூட இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் கிட்டத்தட்ட அடிமைகளாக நடத்தப்படுவதாலும், ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறும் இலங்கைத் தமிழர்களுக்கு தொடக்கத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும் பின்னர் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாலும் இலங்கைத் தமிழர்கள் உயிரை பணயம் வைத்து ஆஸ்திரேலியா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு கடந்த 20 நாட்களுக்கு முன் தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக கடல் பயணத்தைத் தொடங்கிய 44 தமிழர்கள் தான் இப்போது இந்தோனேஷிய கடலில் தவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவை நோக்கிய கடல் பயணத்தின் போது படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் தவித்த தமிழர்களை அந்நாட்டு மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களை கடற்கரைக்குள் தரையிறங்க இந்தோனேஷிய அதிகாரிகள் மறுத்து விட்டனர். கடும் குளிரும் உயிர்பயமும் வாட்டிய நிலையில் 6 பெண்கள் படகிலிருந்து குதித்து கடலில் குதித்து கடற்கரையில் ஏற முயன்ற போது இந்தோனேஷிய காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்தியுள்ளனர். இதனால் அஞ்சிய 6 பெண்களும் மீண்டும் படகில் ஏறிவிட்டனர். 9 குழந்தைகள், ஒரு கருவுற்ற பெண் உள்ளிட்ட 44 பேரும் கொந்தளிக்கும் கடலில் சிறிய படகில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச விதிகளின்படி அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டிய இந்தோனேஷிய அரசு அவர்களை காப்பாற்ற மறுக்கிறது. அதுமட்டுமின்றி, கடல் கொந்தளிப்பு அடங்கியதும் அவர்களை இந்தோனேஷிய கடல் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விடவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இலங்கைத் தமிழர்களுக்கு உயிரிழப்பு உள்ளிட்ட மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

ஆஸ்திரேலியாவின் தஞ்சம் புகும் நோக்கத்துடன் கடலில் படகு பயணம் மேற்கொண்ட தமிழர்களில் 1200 பேர் கடந்த 2008 ஆம் ஆண்டுக்கும் 2013 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கடல் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து விடக்கூடாது. இதற்காக இந்தோனேஷிய கடலில் சிக்கித் தவிக்கும் 44 தமிழர்களையும் மீட்க இந்தோனேஷிய அரசும், பன்னாட்டு அமைப்புகளும் முன்வர வேண்டும்.

கடலில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களை மீட்க வேண்டிய பொறுப்பு மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு அதிகம் உள்ளது. ஏனெனில், கடலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து கடல் பயணத்தைத் தொடங்கியவர்கள் ஆவர். இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாவும், கவுரவமாகவும் வாழ்வதற்கு வகை செய்யப்பட்டிருந்தால் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்காது.

எனவே, இந்தோனேஷிய கடலில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் 44 பேரையும் உடனடியாக இந்தோனேஷியாவுக்குள் அனுமதிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு சட்டபூர்வமாக அனுப்பி வைக்கவோ, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பில் நிம்மதியாக வாழவோ உலக நாடுகள் வகை செய்ய வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x