Published : 13 Dec 2013 06:32 PM
Last Updated : 13 Dec 2013 06:32 PM

கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் வழங்க ஏற்பாடு: ஜெயலலிதா

கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதன்மூலம் கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு எளிதாக கல்விக்கடன் கிடைக்க வகை செய்யப்படும் என்பதால், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:

* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.

* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

* சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம் ஏற்படுத்தப்படும்.

* தேனி மாவட்டம் கண்டமனூர்விளக்கு என்ற இடத்தில் 110/22 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அனுமதிக்கப்படும்.

* வைகை ஆற்றில் வாலிப்பாறை மற்றும் கோவிந்த நகரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதி புதூர் மற்றும் பூசலகுடி ஆகிய இடங்களில் 110/22 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

* சிவகங்கை மாவட்டம் குறுந்தம்பட்டு ஊராட்சியில் மணிமுத்தாறு ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டப்படும்.

* தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை சாலை அமைக்கப்படும்.

* மதுரை - தூத்துக்குடி சாலை 130/4 முதல் 133/2 வரை அகலப்படுத்தப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் குழந்தை பிறப்பை குறைக்க புதிய திட்டம் அனுமதிக்கப்படும்.

* முக்காணி அருகே தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும்.

* திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அனுமதிக்கப்படும்.

* கோவை மாநகரில் மோனோ ரயில் இயக்க பூர்வாங்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* கோவை காந்திபுரத்தில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* திருச்சி திருவெறும்பூரில் புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.

* சேலம் தலைவாசல், பனைமரத்துப்பட்டியில் விதை கிடங்குகள் அமைக்கப்படும்.

* திருவள்ளூரில் புதிய நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

* கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைக்கப்படும்.

* புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் மற்றும் மதுரவாயல் தாலுகாக்களுக்கு, தாலுகா அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

* திருந்தங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

* சிவகாசி - தென்காசி மற்றும் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் மாநில நெடுஞ்சாலையில் ஆணையூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.

* திருவாரூர் மாவட்டத்தில் 8 குளங்கள் புதுப்பிக்கப்படும்.

* திருவாரூர் நகரில் கமலாலயம் குளம் தூர்வாரப்படும்.

* திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவில் உள்ள மூணாறு தலைப்பு என்ற இடம் சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

* வைகை அணையிலிருந்து வத்தலகுண்டு பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x