Last Updated : 11 May, 2017 08:14 AM

 

Published : 11 May 2017 08:14 AM
Last Updated : 11 May 2017 08:14 AM

‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணியில் தேர்வில் முறைகேடு கூடாது என்பதாலேயே இவ்வளவு கெடுபிடி: நீட் தேர்வு மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் விளக்கம்

‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணியில் தேர்வில் முறைகேடு நடக்கக்கூடாது என்பதாலேயே மாணவர்களிடம் கடுமையான சோதனை நடத்தப்பட்டதாக நீட் தேர்வு மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 7-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை எழுத வந்த மாணவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் கடுமை யான சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையை அரைக்கை அளவுக்கு வெட்டி அனுப்பினர். மாணவிகள் அணிந் திருந்த முக்கால் கை குர்த்தாவும் கிழிக்கப்பட்டது. மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் அறுக்கப்பட்டன. மாணவிகள் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், தலையில் இருந்த ஹேர்பின் போன்றவைகள் அகற்றப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக கேரள மாநிலம் குன்னிமங்கலம் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தேர்வு எழுத வந்த மாணவி யின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால், உள்ளாடை யை அகற்ற சொல்லி கட்டாயப்படுத் தினர். நீட் தேர்வு எழுத வந்த மாண வர்களுக்கு நடந்த இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து நீட் தேர்வு மையங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் கூறியதாவது:

சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத் தலின்படிதான் நாங்கள் மாணவர் களிடம் சோதனை நடத்தினோம். தேர்வில் காப்பி அடிக்க புத் தகங்கள், துண்டு சீட்டுகளை மறைத்து எடுத்து வந்திருப்பார்கள் என்று சோதனை செய்யவில்லை. சில மாணவர்கள் மிகவும் சிறிய அளவிலான புளூடூத், கேமரா, மைக்குகள் போன்ற அதிநவீன சாத னங்கள் மூலமாக தேர்வின்போது வெளியே உள்ளவர்களின் உதவி யுடன் தேர்வை எழுத முடியும்.

சிறிய புளூடூத், கேமரா

மூக்குத்தி, கம்மல், பட்டன் போன்றவற்றில் அந்த சிறிய அள விலான புளூடூத், கேமரா, மைக்கை எளிதாக பொருத்தி மறைத்து வைக்க முடியும். அதற்கான டிவை சர் கருவியை உள்ளாடைகளில் பொருத்தலாம். அந்த கேமரா மூலம் வெளியே இருப்பவர்கள் கேள்வித் தாளை பார்த்து பதில்களை சொல்ல தேர்வு எழுதும் மாணவர்கள் காதுக்குள் மறைத்து வைத்துள்ள சிறிய புளூடூத் கருவி மூலமாக கேட்டு குறிக்கலாம். அதனால்தான் மூக்குத்தி, கம்மல், பெரிய அளவிலான பட்டன் போன்றவை அகற்றப்பட்டன. உள்ளாடைகளும் சோதனை செய்யப்பட்டது.

திரைப்பட பாணி

‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்பட நாயகன் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வின் போது புளூடூத் மூலமாக வெளியில் உள்ள மற்றொருவரின் உதவியுடன் தேர்வு எழுதுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த திரைப் பட பாணியில் சென்னையில் எம்பிபிஎஸ் தேர்வின்போது வெளி யில் உள்ளவர்களின் உதவியுடன் தேர்வு எழுதிய மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்தது. மாணவர்களும் நீதிமன்றம் வரை சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்களிடம் சோதனைகளும் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு நீட் தேர்வின்போதும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு இது பெரிதாக பேசப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ விளக்கம்

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்டது வருத்தம் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியிடம், அந்த பள்ளியின் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வில் (AIPMT) வட மாநிலங்களில் மாணவர்கள் புளூடூத் கருவியை காது மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வெளியே உள்ளவர்களின் உதவியுடன் தேர்வை எழுதினர். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்த பிறகு, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க முறையான செயல் திட்டங்களை உருவாக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி கடுமையான விதி முறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின்படிதான் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்றது. இதனை உச்ச நீதிமன்றமும் பாராட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x