Published : 27 Mar 2017 09:23 AM
Last Updated : 27 Mar 2017 09:23 AM

10-ம் வகுப்பு ஆங்கிலம் விடைத்தாளை பிற பாட ஆசிரியர்கள் திருத்துவதாக புகார்: ஆண்டுதோறும் நடக்கும் குளறுபடி நடப்பாண்டு தீருமா?

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலை யில், விடைத்தாள்களை முறை யாக அந்தந்த பாட ஆசிரியர் களைக் கொண்டு திருத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வில் ஏற்கெனவே 4 பாடங்களுக்கான தேர்வுகள் முடிவுற்றுள்ளன. கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத்தேர்வு வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 3 விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் போது நடைபெறும் பல்வேறு குளறுபடிகளை அரசு தேர்வுத் துறை அலட்சியப்படுத்துவதாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற முக் கிய பாடங்களுக்கான விடைத்தாள் கள், வேறு பாட ஆசிரியர்களைக் கொண்டு திருத்தப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார் எழுகிறது. குறிப்பாக ஆங்கில விடைத்தாள்களை, பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் களைக் கொண்டு மட்டுமே திருத்து வதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய மதிப்பெண் கிடைக்கும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்து கின்றனர்.

அவர்கள் கூறியதாவது: விடைத் தாள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் அறிவியல், சமூக அறிவியல் கற்பிக்கும் ஆசிரி யர்களைக் கொண்டு ஆங்கில விடைத்தாள்கள் திருத்தப்படுகின் றன. பிற பாடங்களைவிட, ஆங்கிலத்தில்தான் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாண வர்கள் தங்கள் சொந்த திறனில் வித்தியாசமான முறையில் சரியான பதிலை எழுதியிருப்பர். ஆனால், விடைத்தாள் திருத்தும்போது வழங்கப்படும் ‘ஆன்ஸர் கீ’யில் அந்த விடை இருக்காது. இதனால், ஆங்கிலப் பாடம் நடத்தாத ஆசிரியர் அந்த விடைக்கு மதிப்பெண் வழங்கமாட்டார். இது மாணவர்களுக்கு மதிப்பெண் இழப்பை ஏற்படுத்தும்.

இதுபோல், தமிழ்வழி மாணவர் களின் விடைத்தாள்களை தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர் களைக் கொண்டும், ஆங்கிலவழி மாணவர்களின் விடைத்தாள்களை ஆங்கிலவழி ஆசிரியர்களைக் கொண்டும் திருத்தச் செய்ய வேண் டும்.

சிலர் ஊதியத்துக்கு ஆசைப் பட்டு, தாங்கள் கற்பிக்காத பாடத் தின் விடைத்தாளையும் திருத்த முற்படுகின்றனர். இதைத் தடுக்க, விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்கும்போது வழங்கப்படும் பணி ஆணையில், பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் பாடம் குறிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் விடைத்தாள் திருத்து வதற்கு, பிற பாட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் விடைத்தாள் மைய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வு முடிவு வெளியான பின், பிளஸ் 2 போல, பத்தாம் வகுப்புக்கும் விடைத்தாள் நகல் கள் வழங்கப்பட்டால், தங்கள் விடைத்தாள்கள் நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்பட் டுள்ளதை மாணவர்களால், உறுதிசெய்துகொள்ள முடியும். பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசு தேர்வுத்துறை இந்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் புதிய கல்வித்துறை செயலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x