Published : 18 Feb 2017 07:49 AM
Last Updated : 18 Feb 2017 07:49 AM

சைபர் குற்றங்களைத் தடுக்க சிறப்புச் சட்டம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல்

சைபர் குற்றங்களை தடை செய்ய மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கோரிக்கை வைத்துள்ளார்.

சைபர் குற்றவியல், டிஜிட்டல் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பான 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள தருமமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

இந்துக் கல்லூரி, டிஜிட்டல் தடயவியல் மையம், தகவல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் சைபர் குற்றவியல், டிஜிட்டல் தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் நேற்று கருத்துரைகள் வழங்கினர்.

திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 கல்லூரிகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் பங்கேற்றனர். இந்த பன்னாட்டு கருத்தரங்கை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: இந்தியா கணினிமயமாகி வருகிறது. நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் முழுமையாக கணினிமயமாக் கப்பட வேண்டும். அப்படி கிராமப்புறங்கள் முழுமையான கணினிமயமாகிவிட்டால், நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். இணையதளங்கள் மூலம் பணம் இழந்தவர்கள் அப்பணத்தைத் திரும்பப் பெறும் வகையில் சட்டம் கடுமையானதாக இருக்க வேண்டும்.

இன்று அலைபேசிகளை அதிக அளவில் மாணவர்களும் பயன்படுத்து கிறார்கள். ஆகையால், தொழில்நுட்பங் கள் மூலம் சைபர் குற்றங்களை தடுப்ப தற்கான ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது போன்று கணினி தகவல்களைப் பாதுகாக்கும் முறை நம் நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும். இணையம் மூலம் பரிமாறப் படும் தகவல்கள் யாவும் மத்திய அரசால் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, கல்லூரி முதல்வர் கல்பனாபாய், செயலாளர் வெங்கடேச பெருமாள், கல்லூரி அறக்கட்டளை நிர் வாகி கண்ணையா, தகவல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி நிறுவன துணைத் தலைவர் டாக்டர் ராமசுப்ரமணியம் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x