Published : 01 Jun 2017 07:20 PM
Last Updated : 01 Jun 2017 07:20 PM

இழப்பு சென்னை சில்க்ஸுக்கு மட்டுமில்லை: ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கருத்து

தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பு சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமில்லை இந்த நாட்டிற்கும், இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஆகும் என்பதை உணர்வோம் என்று ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் கே. ஆர். நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் புதன்கிழமையன்று தீவிபத்து ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட மிக அதிகமான பொருட்சேதமும், அந்தப் பகுதியில் விளைந்த பதற்றமும் ஊடகங்கள் வழியே பலரையும் சென்றடைந்தன. பல மணிநேர போராட்டத்துக்குப் பின் நிலையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சமூக வலைதளங்களில் தீ விபத்து குறித்து கேலி, கிண்டல் தொனிக்கும் பல பதிவுகள் வலம் வருகின்றன.

இதுகுறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் கே. ஆர். நாகராஜன் தெரிவித்துள்ள கருத்து, வாட்ஸ் அப் குழுக்களிடையே பரவி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''சென்னை சில்க்ஸில் தீ… இந்த செய்தியை வைத்து எவ்வளவோ விமர்சனங்கள் தொலைக்காட்சியில், செய்தித்தாள்களில், வாட்ஸ் அப்பில் வந்தவண்ணமே உள்ளன. மனம் வலிக்கிறது.

இந்த விபத்தால் எவ்வளவு பாதிப்புகள்.. இதனால் நஷ்டம் என்பது கடை உரிமையாளருக்கு மட்டும் இல்லை.

முதலில் 7 தளங்களில் வேலை செய்பவர்களுக்கு - தோராயமாக 800 பேருக்கு - வேலை போய்விடும் நிலைமை. அவர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படும். அவர்கள் வேலை செய்யும் சான்றிதழ்கள், ஆவணங்கள் அனைத்தும் போன நிலைமையில் அவர்களின் துன்பத்தினை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒரு கடை உருவாக எத்தனை பேரின் உழைப்பு தேவைப்படுகிறது. ஆர்க்கிடெக்ட், கொத்தனார்கள்.அது மட்டுமில்லாமல் பொருட்சேதம், அப்பொருட்களை உருவாக்கிய நேரத்தின் மதிப்பு, கடைதனில் வைத்திருந்த சரக்குகளின் பின் உள்ள மூலதனம், ஒரு பட்டுப் புடவை தயார் செய்ய ஆகும் நேரம், செலவு.ஒரு நகை செய்ய எவ்வளவு முயற்சி?

நேற்று அங்கே இருந்த கடைகள் பலவும் மூடப்பட்டன. நடைபாதை கடை வியாபாரிகள் பலர் அன்றாடம். வருமானத்திலிருந்து கடன் கட்டி மீதி உள்ள வருமானத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்களின் நிலைமையை யோசியுங்கள். நேற்று ஒரு நாள் கடைகள் மூடப்பட்டதால் நமது அரசாங்கத்திற்கு எத்தனை வரி இழப்பு? உணவகங்கள், தங்க நகை வியாபாரிகளுக்கு நேற்று ஒரு நாளின் நஷ்டம்தான் எத்தனை..

கடைக்கு சரக்குகளை இந்தியா முழுவதிலிருந்தும் சப்ளை செய்தவர்கள் அனைவரும் தங்கள் பணத்தினை பெற அதற்குண்டான ஆவணங்களை மீண்டும் தர வேண்டும். அது எத்தனை பெரிய முயற்சி. சென்னை சில்க்ஸ் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருப்பினும், அதன் உரிமையாளர்கள் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் அவர்களின் மனம் என்ன பாடுபடும். பணம் நிறைய இருந்தால் மன உளைச்சல் குறைந்து விடுமா என்ன? மீண்டும் இதனை சீர் செய்ய எவ்வளவு முயற்சி, பணம், உழைப்பு, மனிதர்கள் வேண்டும்!

நமக்கென்ன.. எளிதாக கமென்ட் அடித்து, அடுத்தவர்களின் கஷ்டத்தை, துன்பத்தை விளையாட்டாக எண்ணி விடுகின்றோம். ஒரு வாரத்தில் அதனை மறந்து அடுத்ததாக எதைப் பற்றி எழுதி கலாய்க்கலாம், விமர்சிக்கலாம், வியாபாரமாக்கலாம் என்று கடந்து விடுகின்றோம்.

ஜப்பான் போன்ற நாடுகளில் இத்தகைய ஓர் இழப்பினை மனிதர்களின் உழைப்பின் இழப்பாக, விரயமாக கருதுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் உழைப்பை மதிக்கின்றார்கள். யாருடைய நஷ்டத்தினையும் நாட்டின் பொருளாக, தமது இழப்பாக கருதுகிறார்கள். நம்மால், நம்மில் பலரால் ஏன் இவ்வாறு நினைக்க முடிவதில்லை?

இதில் மனதை நிம்மதியுறச் செய்யும் ஒன்று, உயிர் பலியாகவில்லை என்பது தான் ஒரே ஆறுதலான விஷயம். பதிவுகளையும் விமர்சனங்களையும் தவிர்த்து கொஞ்சம் சிந்தித்து இந்த இழப்பு சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமில்லை இந்த நாட்டிற்கும், இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஆகும் என்பதை உணர்வோம்.

இந்த பேரிழப்பிலிருந்து சென்னை சில்க்ஸ் குடும்பத்தார் மீண்டு வர அவர்களுக்கு தேவையான மனவலிமையையும், அனைத்தையும் சமாளித்து புதுப்பொலிவுடன் வெளியில் வர மிகப்பெரும் ஆற்றலையும் அளிக்க ஆண்டவனை வேண்டி என்றும் நாம் உடன் துணையிருப்போம்'' என்று நாகராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x