Published : 07 Sep 2016 11:50 AM
Last Updated : 07 Sep 2016 11:50 AM

சாதி எனும் கட்டமைப்பை உடைக்கும் கருவிகளே புத்தகமும் இசையும்!- டி.எம்.கிருஷ்ணா கருத்து

சாதி எனும் கட்டமைப்பை உடைக்கிற கருவிகளே புத்தகமும், இசையும் என்று கர்நாடக இசைக்கலைஞரும், மகசேசே விருதுபெற்றவருமான டி.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

மதுரை புத்தகத் திருவிழாவையொட்டி, ‘புனைவு காலச்சுவடு’ பதிப்பகங்கள் சார்பில் மூன்று புதிய நூல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதை வாசிப்புடன் தொடங்கிய இந்த விழாவில், கோ.ரகுபதி பதிப்பித்த ‘ஆந்தம்பண்டிதர் சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்’ எனும் நூலை இ.ரா.பவணந்தி வேம்புலு வெளியிட, பண்டிதர் சா.து.அரிமாவளவன், ஆசனா ஐ.தங்கவேல், ஆதிமருத்துவன் சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பவணந்தி பேசுகையில், “இந்திய வரலாற்றில் பல ஆளுமைகளின் வரலாறுகள் புதைக்கப்பட்டன. அவற்றை தோண்டியெடுத்து அங்கீகரிக்கிற மீட்டுரு வாக்க வரலாறுகள் தற்போது எழுதப்பட்டு வருகின்றன. அதைப்போல, தேசிய, திராவிட, இடதுசாரி இயக்கங்களால் பல தலித் ஆளுமைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரான அயோத்திதாச பண்டிதரை அலோசியஸ் வெளிக்கொண்டு வந்ததைப்போல, ஆனந்தம்பண்டிதரை கோ.ரகுதிபதியின் இந்த நூல் உரிய இடத்தில் அமர்த்தும்” என்றார்.

உதயகுமார் நேர்காணல்கள்

அதைத் தொடர்ந்து, ‘சுப.உதயகுமார் நேர்காணல்கள்’ எனும் நூலை ஒய்.டேவிட் வெளியிட, மஹபூப்பாட்சா பெற்றுக்கொண்டார். அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பேசுகையில், “உணு உலையை எதிர்த்து எவ்வளவோ போராட்டம் நடத்திவிட்டீர்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை, பிறகேன் போராட வேண்டும் என்று சிலர் கேட்கலாம். இன்று உலகமே வளர்ச்சி வளர்ச்சி என்று ஓடிக்கொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் வளர்ச்சி என்ற வார்த்தையே பைத்தியக்காரத்தனமானது.

எது வளர்ச்சி என்ற புரிதலின்றி நீர், நிலம், ஆகாயம் என்று அத்தனையையும் மாசுபடுத்தி வருகிறது மனித சமுதாயம். குடிகாரன் எப்போது தன்னை ஒரு குடிகாரன் என்று உணர்கிறானோ அப்போதுதான், அதில் இருந்து மீள முடியும். அதைப்போல உண்மையான வளர்ச்சி எது என்றும், இப்போது நாடுகளுக்கிடையே நடப்பது அழிவுக்கான ஓட்டமே என்றும் புரிந்துகொண்டால் தான் இந்த மாயையில் இருந்து நாம் விடுபட முடியும். அதுவரையில் போராட்டம் நடத்தத் தான் வேண்டும்” என்றார்.

சாதியும் சமூகமும்

நிறைவாக ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘ஆணவக்கொலைகளின் காலம்’ கட்டுரை நூலை எவிடன்ஸ் கதிர் வெளியிட, பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கதிர் பேசுகையில், “சாதியை, ஏதோ சில சாதிக்கட்சிகள் மட்டுமே பின்பற்றுகின்றன என்று கருதக்கூடாது. பாம்பின் நாக்கைப்போல சமுகத்திடம் இருந்து அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் நடக்கிற ஆவணக்கொலைகளில் இறப்பவர்களில் 80% பேர் சாதி இந்துப் பெண்கள். 20% பேர் தலித் இளைஞர்கள். இவை எல்லாம் பதிவு செய்யப்பட்டவை.

இதைத்தவிர, சந்தேக மரணம், காவல்துறைக்குத் தெரியாமல் பிணத்தை எரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் பல வழக்குகளும் கூட உண்மையில் ஆணவக்கொலைகள் தான். கொலை செய்வது சொந்த தகப்பன் என்பதால், புகார் கொடுக்கக்கூட ஆளின்றி இந்த வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகம் அதைப்பற்றி அழுத்தம் திருத்தமாக பேசுகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் சமீபத்தில் மகசேசே விருது பெற்ற எழுத்தாளர், கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சிறப்புரையாற்றினார். “இந்த நிகழ்ச்சியில் உனக்கென்ன வேலை? என்று சிலர் கேட்கலாம். நான் வளர்ந்தது எல்லாம் சென்னை மயிலாப்பூர் பகுதியில். கர்நாடக இசை உயர்ந்தது என்றும், அதைத் தெரிந்திருந்த என்னை பெரிய கலைஞன் என்றும் கருதிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கட்டைக்கால் கூத்து பார்க்கச் சென்றபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், என்னைச் சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதை ரசித்தார்கள். கலை வழியாக நான் மக்களை பார்த்தேன். நான் கர்நாடக இசையை குப்பத்து மக்களுக்குச் சொல்லிக்கொடுப்பது, அவர்களை மேம்படுத்துவதற்காக அல்ல. அவர்கள் ஏற்கெனவே வேறு சில கலைகளில் மேம்பட்டவர்கள் தான். கர்நாடக இசையை காப்பாற்றுவதற்காகவே அவர்களுக்கு கற்றுத்தருகிறேன்.

இங்கு வெளியிடப்பட்ட மூன்று புத்தகங்களும் கொலையைப் பற்றித்தான் பேசுகின்றன என்று கருது கிறேன். ஸ்டாலின் ராஜாங்கத்தின் நூல், ஆணவக்கொலைகளைப் பற்றிப் பேசுகிறது என்றால், சுப.உதய குமாரின் நேர்காணல்கள் சுற்றுச்சூழல் படுகொலையப்பற்றி பேசுகிறது. ஆனந்தம்பண்டிதர் பற்றிய நூல் அறிவுஜீவிகளை வரலாற்றில் இருந்தே கொலை செய்துவிடுவதைப் பற்றிப் பேசுகிறது.

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்று வதற்கு எதிராக போராடி என்னுடன் மகசேசே விருதுபெற்ற பெஸ்வாடா வில்சன் ஒரு பேட்டியின்போது குறிப் பிட்டார், ‘நான் மறக்கலாம் என்று ஆசைப்பட்டாலும் ஒவ்வொரு வினாடியும் யாராவது ஒருவர் என் சாதியை ஞாபகப்படுத்துகிறார்கள்’ என்று. அதை நானும் உணர்ந்திருக்கிறேன். என்னை பெருமையாக உணர வைப்பவர்கள், தாழ்த்தப்பட்டவர்களை சிறுமையாக உணர வைக்கிறார்கள்.

இதெல்லாம் தவறு என்று சம்பந்தப் பட்டவர்களை சிந்திக்க வைக்கிற கலைதான் எழுத்து. அதே வேலையைத் தான் என்னுடைய இசையும் செய்கிறது. என்னைப் பொருத்த வரையில், சாதி எனும் கட்டமைப்பை உடைக்கிற, அது தவறென்று உணர வைக்கிற கருவிகள் தான் புத்தகமும், கலையும். எனவே தான் இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன்” என்றார்.

குழந்தைகளை எங்கு அழைத்துச் செல்லலாம்?

மதுரை புத்தகத் திருவிழாவில் குழந்தைகளை அவசியம் அழைத்துச் செல்ல வேண்டிய அரங்குகள் ஏராளம். அதேநேரத்தில், 260 அரங்குகளுக்கும் குழந்தைகளை நடத்திச் சென்றால், சோர்வடைய வாய்ப்புள்ளது என்பதால், முதலில் குழந்தைகளுக்கான பிரத்யேக அரங்குகளுக்கு அழைத்துச் செல்வதே சிறந்தது.

குறிப்பாக, புக்ஸ் பார் சில்ட்ரன் (அரங்கு எண்: 4), டைகர் புக்ஸ்(8), ஸ்பைடர் புக்ஸ் (15), நேஷனல் புக் ட்ரஸ்ட் (187), புக் வேர்ல்டு லைப்ரரி (169), புக் வேர்ல்டு (179), லியோ (195), புக் அபைர் (212), ட்ரீம் வேஸ் (61) அரங்குகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

அறிவியல் ஏ டு இசட்!

‘புக்ஸ் பார் சில்ட்ரன்’ அரங்கில், ‘தி இந்து’வில் ‘அறிவியல் அறிவோம்’ தொடர் எழுதிவரும், விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரனின் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன. அதேபோல, ஆசிரியர் ஆயிஷா நடராஜனின் அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான புத்தகங்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க வெளியீடுகள் கிடைக்கின்றன. இந்தாண்டுக்கான புதிய வரவுகள்: அறிவியல் சொற்களுக்கு படத்துடன் விளக்கம் தருகிற ‘அறிவியல் ஏ டு இசட்’ புத்தகம், சங்கிலியை இழுத்தால் எப்படி ரயில் நிற்கிறது? நட்சத்திரங்கள் மினுமினுப்பது ஏன் என்பது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடை தருகிற, ‘எப்படி? எப்படி?’, டி.வி.யில் பார்த்த கார்ட்டூன் நாயகர்களையே புத்தக கதைக்குள் கொண்டு வந்திருக்கும் ‘டோரா வரை கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு’(ஆயிஷா நடராஜன்), புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ‘குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்’

ஒலிம்பிக் விளையாட்டுகள்!

புத்தகம் படிக்கும் ஆர்வத்தை மக்களிடையே வளர்ப்பதற்காக நடத்தப்பட்டு வரும் மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவன அரங்கில் (127), குழந்தைகளுக்கான புத்தகங்களும் ஏராளமாக உள்ளன. ‘ஒலிம்பிக் விளையாட்டும், வீரர்களும்’என்ற 64 பக்க புத்தகம் வெறும் 5 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதேபோல கதைகள், படக்கதைகள், இந்திய நதிகள், பண்பாடு, திருவிழாக்கள், விளையாட்டு, விஞ்ஞானிகள் குறித்த புத்தகங்களும் மலிவு விலையில் கிடைக்கின்றன.

நாட்டுக்கு உழைத்த நல்லவர்!

ஒருகாலத்தில் தமிழ் பாடப் புத்தகத்தை வாங்கிய கையோடு, கோனார் தமிழ் உரையை வாங்காதவர்களே இருக்க மாட்டார்கள். மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் அய்யம்பெருமாள் கோனார், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பணியாற்றியவர். எழுத்தாளர் சுஜாதாவின் தமிழாசிரியரும் இவரே. இவரது எளிய தமிழ் உரைகளை கோனார் தமிழ் உரை என்ற பெயரில் வெளியிட்ட சென்னை பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம், தற்போது ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்’ என்ற தலைப்பில் தலைவர்களை பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது. வழக்கமான தலைவர்களை பற்றி மட்டுமின்றி மோதிலால் நேரு, பிரகாசம், திருவிக, ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசன்ட், லால் பகதூர் சாஸ்திரி, ஊமைத்துரை, ராஜேந்திரபிரசாத், விஸ்வேஸ்வரய்யா போன்றவர்களை பற்றிய புத்தகங்களும் கிடைக்கின்றன.

வேடிக்கை பார்க்க ஓர் அரங்கம்!

புத்தகக் காட்சியில் ‘தி இந்து’ அரங்கம் அருகில் ‘சாந்து அறிவியல் உபகரண நிறுவன’ அரங்கு உள்ளது. இங்கே சாதாரண குவியாடி, குழியாடி தொடங்கி நிலவை அருகில் காட்டுகிற தொலைநோக்கி, கிருமிகளை பார்க்கிற நுண்ணோக்கி, வெர்னியர், திருகளவி, 1 கிலோ மீட்டர் தூரம் வரையில் ஒளியை உமிழும் டார்ச் லைட், சூரியசக்தியில் இயங்கும் ரோபோ போன்ற அறிவியல் சாதனங்கள் கிடைக்கின்றன. விலை அதிகமாக இருப்பதால், பொருட்களை வாங்குவது சிரமம். ஆனால், வேடிக்கை பார்க்க காசு தேவையில்லையே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x