Published : 15 Jun 2017 02:25 PM
Last Updated : 15 Jun 2017 02:25 PM

ஜனநாயக ரீதியாக சட்டப்பேரவையை தமிழக அரசு முறையாக நடத்திட வேண்டும்: வாசன்

ஜனநாயக ரீதியாக சட்டப்பேரவையை தமிழக அரசு முறையாக நடத்திட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு சட்டசபையை முறையாக நடத்தக்கூடிய அரசாக செயல்பட முடியவில்லை. காரணம் ஆளும் ஆட்சியிலும், உட்கட்சியிலும் அவர்களுக்கு இருக்கின்ற கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் தான். இந்தப் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் எத்தனை நாள் நீடிக்க முடியும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தமிழக மக்கள் நலனும், தமிழக வளர்ச்சியும் நேரடியாக பாதிக்கப்படுகிறது.

கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தபோது பண பேரம் நடைபெற்றதாகவும், இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பந்தபட்டிருப்பதாகவும் வெளிவரும் செய்திகளும், அதன் அடிப்படையிலேயே ஆட்சி தொடர்கிறது என்றால் ஜனநாயகத்தில் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது என்பதை வாக்களித்த வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

சட்டம் தன்னுடைய கடமையைச் செய்வதற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாது.கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்ந்த பிரச்சினைகளும், குற்றச்சாட்டுகளும் நேரடியாக ஆட்சியாளர்களை பாதிக்கக்கூடிய வகையில் வெளிவந்திருக்கும்போது அதனை பேரவையிலே நடுநிலையோடு கையாண்டு வாக்களித்த மக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் தெளிவுப்படுத்த வேண்டியது சபாநாயகரின் கடமை. இதற்கு ஆளும் ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு நல்குதல் தான் நல்லது.

மேலும் ஆளும் ஆட்சியாளர்கள் பேரவையில் எதிர்கட்சிகள் இல்லாமல் மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்கின்றதென்றால் அது ஆட்சியாளர்களின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகின்றது.

குறிப்பாக தமிழகத்தில் நிலுவையில் உள்ள முக்கியப் பிரச்சினைகளான விவசாயிகள் கோரிக்கைகள், மீனவர்கள் பிரச்சினை, போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள், தடுப்பணை பிரச்சினைகள், தண்ணீர் தட்டுப்பாடு, மதுக்கடைகளை மூடுதல், பாலில் கலப்படம் மற்றும் பிளாஸ்டிக் அரிசி போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி அதற்கான உரிய தீர்வு காண்பதற்கு நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு மானியக் கோரிக்கைககள் மீது எதிர்கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, ஜனநாயக ரீதியாக சட்டப்பேரவையை முறையாக நடத்திட வேண்டும். மேலும் ஆட்சி, அதிகாரத்தில் எந்தவித குழப்பமும், பாதிப்புமும் ஏற்படாமல் மக்களுக்கான பணிகளை தங்கு, தடையின்றி மேற்கொள்ள வேண்டியது தான் தமிழக அரசின் பணியாக இருக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x